பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் கரும்பு தோட்டங்கள் தீப்பிடித்தன
தர்மபுரி:
பாலக்கோடு அருகே உள்ள தும்பலஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 50). இவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார். தற்போது கரும்பு நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராக இருந்தது. இந்தநிலையில் நேற்று காலை கரும்பு தோட்டத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து உடனடியாக பாலக்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் செல்வம் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் ரூ.1 லட்சம் மதிப்பிலான கரும்புகள் தீயில் எரிந்து நாசமானது. அந்த பகுதியில் மின் கம்பங்கள் உள்ளதால், மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் மெணசியை சேர்ந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வத்துக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் மேலே தாழ்வாக சென்ற மின்கம்பிகளால் தீ பற்றியது. இதனால் 3 ஏக்கரில் அவர் பயிரிட்டிருந்த கரும்பு மற்றும் அருகில் மாசிலாமணிக்கு சொந்தமான தோட்டத்தில் இருந்த கரும்புகள் தீயில் எரிந்து நாசமாகின.