கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற மூதாட்டி
சொத்துப்பிரச்சினை காரணமாக திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.
மூதாட்டி தீக்குளிக்க முயற்சி
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், தேனி மாவட்டம் பழனி செட்டிப்பட்டியைச் சேர்ந்த பரமேஸ்வரி (வயது 66) என்ற மூதாட்டி திடீரென தான், பாட்டிலில் கொண்டு வந்த பெட்ரோலை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அதற்குள் அங்கிருந்த போலீசார் அவரை தீக்குளிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கலெக்டரிடம் மனு அளித்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
எனக்கு 4 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். எனது மூத்த மகன் ராமதாஸ் உடுமலையில் வசித்து வந்தார். எனது கணவருக்கு பாத்தியப்பட்ட சொத்துகளில் எனது மற்ற மகன்கள் அனுமதியுடன் ரூ.50 லட்சம் வரை ராமதாசுக்கு கொடுத்தேன்.
அவர் நல்ல முறையில் தொழில் செய்து உடுமலையில் பல சொத்துக்களை வாங்கியுள்ளார். தம்பி, தங்கைகளுக்கு தேவைப்படும்போது சொத்தை விற்று சரிசமமாக பிரித்துக்கொள்ளலாம் என்று நாங்கள் பேசியிருந்தோம். நான் எனது 2-வது மகன் ஆண்டவர் வீட்டில் வசித்து வருகிறேன். இந்த நிலையில் எனது மகன் ராமதாஸ் கடந்த 27-2-2021 அன்று இறந்து விட்டார்.
சொத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும்
அதன் பின்னர் எனது மகன் பெயரில் உள்ள சொத்துக்களை அவரது மனைவி, மகன் ஆகியோர் அவர்கள் பெயரில் உரிமம் மாற்றம் பெற முயன்றனர்.
இதுகுறித்து உடுமலை ஆர்.டி.ஓ.விடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. எனக்கு சட்டபூர்வமாக சேர வேண்டிய சொத்தில் உள்ள பங்கு உரிமத்தை கேட்டாலும் கொடுக்க மறுக்கிறார்கள். உரிய விசாரணை நடத்தி எனக்கு சேர வேண்டிய சொத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.