லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
உடுமலை அருகே சாலை யின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மக்காச்சோள மூட்டைகள்
திருப்பூர் மாவட்டம் உடுமலையையடுத்த கல்லாபுரம் வேல்நகர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவர் மகன் மணிகண்டன் (வயது 29). இவர் தனக்குச் சொந்தமான லாரியில் அவரே டிரைவராக இருந்து ஓட்டியும் வந்தார்.
இந்த நிலையில் கல்லாபுரத்திலிருந்து மக்காச்சோள மூட்டைகளை லாரியில் ஏற்றிக் கொண்டு உடுமலை வெஞ்சமடை பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு கொண்டு வந்துள்ளார். அங்கு மக்காச்சோள மூட்டைகளை இறக்கி விட்டு அந்த பகுதிக்கு அருகில் உள்ள சுந்தர்நகர் பகுதியில் லாரியை நிறுத்தி விட்டு கல்லாபுரம் சென்று விட்டார்.
வழக்குப்பதிவு
இந்தநிலையில் நேற்று அதிகாலை லாரியில் திடீரென்று தீப்பிடித்தது. சற்று நேரத்தில் லாரி முழுவதும் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. உடனடியாக அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் உடுமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து பலத்த போராட்டத்துக்குப் பிறகு தீயை அணைத்தனர். அதற்குள் லாரி முழுவதும் எரிந்து எலும்புக்கூடு போல மாறியது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த உடுமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பேட்டரி பவர் ஒயரில் ஏற்பட்ட கசிவின் காரணமாக லாரியில் தீப்பிடித்திருக்கலாம் என்று தெரிய வந்திருக்கிறது.
சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.