பெட்ரோல் பங்க் பின்புறம் தீ விபத்து


பெட்ரோல் பங்க் பின்புறம் தீ விபத்து
x

தஞ்சையில் பெட்ரோல் பங்க் பின்புறம் தீ விபத்து ஏற்பட்டது.

தஞ்சாவூர்


தஞ்சை காந்திஜிசாலையில் புதுஆற்றுப்பாலம் அருகே பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த பங்கிற்கு பின்புறம் காலி இடம் உள்ளது. இந்த இடம் பள்ளிவாசலுக்கு சொந்தமானது. இந்த இடத்தில் புற்கள், செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. நேற்றுமதியம் திடீரென புற்களில் தீப்பிடித்து செடி, கொடிகளுக்கு வேகமாக பரவியது. இதை பார்த்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் தஞ்சை தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.அப்போது பெட்ரோல் பங்க் சுற்றுச்சுவரையொட்டி இருந்த செடி, கொடிகளில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. மேலும் தீக்கனல்களும் பறந்து வந்தன. உடனே தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். பெட்ரோல் பங்க்கை ஒட்டியிருந்த கடைக்காரர்களும் தங்களது கடைகளின் பின்புறத்தில் எரிந்த தீ தங்களது கடைகளில் பிடித்துவிடக்கூடாது என்பதற்காக புதுஆற்றில் சென்ற தண்ணீரை பிளாஸ்டிக் பாத்திரங்கள் மூலம் அள்ளி, கட்டிடங்களின் மீது ஊற்றினர்.தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது என தெரியவில்லை. இது குறித்து தஞ்சை மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story