கோபியில் தீ விபத்து: இறைச்சிக்கடை எரிந்து நாசம்
கோபியில் தீ விபத்து: இறைச்சிக்கடை எரிந்து நாசம்
கடத்தூர்
கோபி அருகே உள்ள கொளப்பலூரை சேர்ந்தவர் ரவி. இவர் கோபி சீதாலட்சுமி புரத்தில் கோழி இறைச்சிக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் வியாபாரம் முடிந்ததும், இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இந்தநிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென இறைச்சிக்கடையின் மேற்கூரை தீப்பிடித்து எரிந்தது. சில நொடிகளில் கடை முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்தது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே கோபி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்கள். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தார்கள்.
எனினும் கடையில் இருந்த கூண்டு, கோழிகளை சுத்தப்படுத்தும் எந்திரம் உள்பட லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகிவிட்டதாக கூறப்படுகிறது.
இறைச்சிக்கடையில் எப்படி தீப்பிடித்தது? என்று தீயணைப்பு துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.