கோபி அருகே வீடு தீப்பிடித்து எரிந்தது; மனைவி கண்முன்னே கணவர் உடல் கருகி சாவு


கோபி அருகே வீடு தீப்பிடித்து எரிந்தது; மனைவி கண்முன்னே கணவர் உடல் கருகி சாவு
x

கோபி அருகே வீடு தீப்பிடித்து எரிந்தது. இதில் மனைவி கண்முன்னே கணவர் உடல் கருகி பலியானார்.

ஈரோடு

கடத்தூர்

கோபி அருகே வீடு தீப்பிடித்து எரிந்தது. இதில் மனைவி கண்முன்னே கணவர் உடல் கருகி பலியானார்.

பி.ஏ.பட்டதாரி

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கூழைமூப்பனூரை சேர்ந்தவர் சுந்தரம். இவருடைய மகன் அர்ஜூன் (வயது 34). பி.ஏ. பொருளாதாரம் படித்த பட்டதாரியான இவர் கூலி வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி கஸ்தூரி. 14 ஆண்டுகளுக்கு முன் கஸ்தூரியை காதலித்து அர்ஜூன் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு யஸ்வந்த் (13), விவின் (6) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் விவன் அதே பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பும், யஸ்வந்த் கோபியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 8-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.

தூங்கச்சென்றார்...

அர்ஜூன் சிமெண்டு சீ்ட்டு போட்ட தன்னுடைய வீட்டில் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அர்ஜூன் மகன் விவினை சிறிது தூரத்தில் உள்ள தாயார் கனகராணியின் வீட்டில் விட்டு விட்டு தான் குடியிருக்கும் வீட்டிற்கு வந்தார். கஸ்தூரியும், யஸ்வந்தும் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார்கள்.

அர்ஜூன் குடியிருக்கும் வீட்டிற்கு அருகிலேயே மேலே தகரத்தாலும்., சுற்றிலும் கீற்றாலும் வேயப்பட்ட ஒரு சிறிய வீடும் உள்ளது. அந்த வீட்டில் அர்ஜூன் தூங்கச்சென்றார்.

தீப்பிடித்து எரிந்தது

இந்தநிலையில் நள்ளிரவில் அர்ஜூன் தூங்கிக்கொண்டு இருந்த வீடு தீப்பிடித்து எரிந்தது. பக்கத்து வீட்டில் வசிக்கும் செல்வி என்ற பெண் இதைப்பார்த்தது பதறிப்போய் கஸ்தூரியை வெளியே நின்றவாறே அழைத்தார். அதைக்கேட்டு தூங்கிக்கொண்டு இருந்த கஸ்தூரி வெளியே ஓடிவந்து பார்த்தார். அப்போது கணவர் தூங்கிக்கொண்டு இருந்த வீடு கொழுந்துவிட்டு எரிவதை பார்த்து அலறி துடித்தார். மேலும் அந்த வீட்டின் வாசல் அருகே ஓடிப்போய், 'வெளியே ஓடி வந்து விடுங்கள்'் என்று கணவரை பார்த்து கத்தினார். அதைக்கேட்டு உள்ளே இருந்த அர்ஜூன் 'என்னால் வெளியேவர முடியவில்லை. முடிந்தால் வரமாட்டேனா'? என்று அழுதபடி கூறியுள்ளார். அதன்பின்னர் தீ அவரை முழுவதுமாக ஆக்கிரமித்துக்கொண்டதால் அவரால் பேச முடியவில்லை.

கருகி கிடந்தார்

உடனே இதுபற்றி கோபி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய பொறுப்பு அதிகாரி முருகேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீ பக்கத்து வீடுகளுக்கு பரவாமல் தடுத்து அணைத்தார்கள். அதன்பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது அர்ஜூன் உடல் கருகி கரிக்கட்டையாக கிடப்பது தெரிந்தது. இதைப்பார்த்து கஸ்தூரியும், உறவினர்களும் கதறி துடித்தார்கள்.

இதற்கிடையே தீ விபத்து பற்றி அறிந்த சிறுவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அர்ஜூனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்கசிவால் இந்த தீவிபத்து நடந்ததாக கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்து போலீசாரும், தீயணைப்பு துறையினரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story