பெயிண்டு குடோனில் பயங்கர தீ விபத்து
ஓசூர் அருகே பெயிண்டு குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மற்றும் டிராக்டர் எரிந்து சேதமடைந்தது.
ஓசூர்
ஓசூர் அருகே பெயிண்டு குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மற்றும் டிராக்டர் எரிந்து சேதமடைந்தது.
பெயிண்டு குடோன்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்தவர் பாபு. இவர் ஆவலப்பள்ளி செல்லும் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் பெயிண்டு பேரல்கள் மற்றும் தின்னர் திரவம் உள்ளிட்ட பொருட்கள் இருப்பு வைக்கும் குடோன் வைத்துள்ளார். நேற்று குடோன் அருகில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த பெயிண்டு பேரல்களில் திடீரென தீப்பிடித்து கொண்டது.
இதனால் தீ மளமளவென பற்றி குடோன் முழுவதும் பரவியது. இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் கரும்புகை பரவியது. இந்த தீ விபத்தில் குடோன் அருகில் நிறுத்தப்பட்டு இருந்த டிராக்டரிலும் தீப்பிடித்து எரிந்தது. இந்த தீவிபத்து குறித்து அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
பொருட்கள் சேதம்
அதன்பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீயை அவர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பெயிண்டு பொருட்கள், டிராக்டர் தீயில் எரிந்து சேதமானது.
இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடோனில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. பெயிண்டு குடோனில் பயங்கர தீவிபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.