பட்டாசு வெடித்த போது 4 இடங்களில் தீ விபத்து


பட்டாசு வெடித்த போது 4 இடங்களில் தீ விபத்து
x

முத்துப்பேட்டையில் பட்டாசு வெடித்த போது 4 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமடைந்தது.

திருவாரூர்

முத்துப்பேட்டை;

முத்துப்பேட்டையில் பட்டாசு வெடித்த போது 4 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமடைந்தது.

பட்டாசு வெடித்தனர்

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை மருதங்காவெளி தெருவை சேர்ந்தவர் அபூபக்கர் சித்திக். இவர் தனது தந்தையின் மாடி வீட்டில் மேல் கீற்று கொட்டகை அமைத்து வசித்து வருகிறார். இவருடைய மனைவி ஜொகராஅம்மாள்(32). இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். அபூபக்கர் சித்திக் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால் இவரது மனைவி குழந்தைகளுடன் இந்த வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அருகில் வசிப்பவர்கள் தங்களது வீட்டின் மொட்டை மாடியில் நின்றவாறு நள்ளிரவு பட்டாசு வெடித்தனர். இதைக்கண்ட ஜொகரா அம்மாள் பட்டாசு வெடித்தவர்களிடம் தனது வீட்டில் தீப்பிடிக்க வாய்ப்பு உள்ளது. எனவே சற்று தொலைவான பகுதிக்கு சென்று பட்டாசு வெடிக்குமாறு கூறினார். இதை பொருட்படுத்தாமல் பட்டாசு வெடித்ததால் பட்டாசில் இருந்து கிளம்பிய தீப்பொறி கூரை வீடு மீது பட்டது. இதனால் ஜொகரா அம்மாள் கண்முன்பு அவரது கூரை வீடு தீயில் எாிய தொடங்கியது. இதனால் அவர் கூச்சலிட்டார்.

ரூ.4 லட்சம் பொருட்கள்

உடனே அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் கூரை வீடு முற்றிலும் எரிந்து நாசமடைந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்டநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அனைத்தனர். தீ விபத்தில் வீட்டில் இருந்த பீரோ, கட்டில் மெத்தை, பிரிட்ஜ், சலவை எந்திரம்,, டி.வி. போன்ற பொருட்கள் உள்பட முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமடைந்தன. இதன் மதிப்பு ரூ.4 லட்சம் என கூறப்படுகிறது.

நிவாரண பொருட்கள்

இது குறித்த புகாரின் பேரில் முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்தமாரிமுத்து எம்.எல்.ஏ. தாசில்தார் மலர்கொடி, பேரூராட்சி தலைவர் மும்தாஜ் நவாஸ்கான் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து அரசின் முதல் கட்ட நிவாரண தொகையாக ரூ. 5ஆயிரம் மற்றும் இதர பொருட்களை வழங்கினர்.

இளைஞர்கள் தீயை அணைத்தனர்

முத்துப்பேட்டை ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த பேரூராட்சி செயல் அலுவலர் சிவசுப்பிரமணியனின் மாடி வீட்டின் கூரை பட்டாசு தீப்பொறி பட்டு தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்த முத்துப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்தனர். இதைப்போல முத்துப்பேட்டை செம்படவன்காடு ெரயில்வே கேட்டு அருகே பட்டாசு விபத்தால் பைரவநாதன் என்பவருக்கு சொந்தமான கூரை வீடு தீப்பிடித்தது. உடனே அப்பகுதி இளைஞர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.மேலும் முத்துப்பேட்டை அடுத்த பேட்டை அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரின் கூரை வீட்டிலும் பட்டாசு தீப்பொறியால் தீப்பிடித்தது. இது குறித்த தகவல் அறிந்த அப்பகுதி இளைஞர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்தனர்.


Next Story