அரசு இசைக்கல்லூரி மைதானத்தில் தீ விபத்து
திருவையாறில் அரசு இசைக்கல்லூரி மைதானத்தில் தீ விபத்து நடந்தது. இதில் 2 ஏக்கரில் செடிகள் கருகி நாசமடைந்தன.
திருவையாறு;
திருவையாறில் அரசு இசைக்கல்லூரி மைதானத்தில் தீ விபத்து நடந்தது. இதில் 2 ஏக்கரில் செடிகள் கருகி நாசமடைந்தன.
இசைப்பள்ளி
தஞ்சை மாவட்டம் திருவையாறு தாலுகா அலுவலகத்தின் அருகே தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் பிற்படுத்தப்பட்டோர் மாணவிகள் விடுதியும் உள்ளது. அரசு இசைக்கல்லூரியில் சுமார் 230 மாணவ- மாணவிகள் வயலின், தவில், வீணை, வாய்ப்பாட்டு, நாதஸ்வரம் போன்றவற்றில் பயிற்சி பெற்று வருகிறார்கள். மாணவிகள் விடுதியின் அருகே நாணல் புற்கள் அதிக அளவில் வளர்ந்து உள்ளன.
தீப்பிடித்தது
நேற்று திடீரென இந்த புற்கள் மீது தீப்பிடித்து எரிந்து உள்ளது. இதைக்கண்ட மாணவ- மாணவிகள் பேரூராட்சி பணியாளர்கள் தீயை அணைக்க முயன்றனர். அப்போது தீ மள மளவென எரிய தொடங்கியது.இதனால் சுமார் 2 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள செடி, கொடி, மரங்கள் தீப்பிடித்து எரிந்தன. மேலும் அப்பகுதியில் கரும்புகை கிளம்பியதால் பெரும் விபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.
தீயணைப்பு வீரர்கள்
இது குறித்து தகவல் அறிந்த திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.சம்பவ இடத்தை தாசில்தார் பழனியப்பா, பேரூராட்சி செயல் அலுவலர், சோமசுந்தரம், பேரூராட்சி துணைத்தலைவர் நாகராஜன் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினா். மைதானத்தில் உள்ள செடிகளில் எப்படி தீப்பிடித்தது? என தெரியவில்லை. இது குறித்து திருவையாறு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் ஒரு தீ விபத்து
திருவையாறை அடுத்த கீழத்திருப்பூந்துருத்தி செபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்தவர் சாமிநாதன். இவருடைய வைக்கோல் போர் நேற்று திடீரென தீ்ப்பிடித்து எரிய தொடங்கியது.இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் ரூ.15 ஆயிரம் மதிப்பிலான வைக்கோல் போர் எரிந்து நாசமடைந்தது.இது குறித்து நடுக்காவேரி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.