அடுக்குமாடி கட்டிடத்தில் தீ; மர சாமான்கள் எரிந்து நாசம்
கும்பகோணத்தில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீப்பிடித்து எரிந்ததில் மர சாமான்கள் எரிந்து நாசமாயின.
கும்பகோணத்தில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீப்பிடித்து எரிந்ததில் மர சாமான்கள் எரிந்து நாசமாயின.
4 மாடி கட்டிடம்
கும்பகோணம் ரெயில் நிலையம் அருகே லால் பகதூர் சாஸ்திரி சாலையில் 4 மாடி கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தில் தங்கும் விடுதி, ஓட்டல் இயங்கி வருகிறது.
இந்த நிலையில் நேற்று மதியம் 12.30 மணி அளவில் இந்த கட்டிடத்தின் 4-வது மாடியில் உள்ள ஓட்டலில் இருந்து திடீரென கரும்புகை வெளியானது. பின்னர் சிறிது நேரத்தில் அங்கு இருந்த பொருட்கள் தீயில் கொளுந்து விட்டு எரிந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த கும்பகோணம் தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் சேகர் தலைமையில் அங்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தண்ணீர் தீர்ந்தது
தீயணைப்பு வண்டியில் கொண்டுவரப்பட்ட தண்ணீர் முழுவதையும் பீய்ச்சி அடித்த பிறகும் தீ கட்டுக்குள் வராததால் உடனடியாக தண்ணீர் நிரப்பப்பட்ட மற்றொரு தீயணைப்பு வாகனத்தை வரவழைத்து அதிலிருந்த தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.
ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ கட்டுக்குள் வந்தது. இந்த தீ வபத்து குறித்து கும்பகோணம் மேற்கு போலீசார் விசாரணை நடத்தினர்.
தேனீக்களை அழிக்க தீ வைப்பு
முதல் கட்ட விசாரணையில் கட்டிடத்தின் 4-வது மாடியில் சிறிய விழாக்கள் நடத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தில் மூங்கில் உள்ளிட்ட மர பொருட்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட இருக்கைகள், மேசைகள் உள்ளிட்டவை இருந்துள்ளன. இந்த கூடாரத்தின் ஒரு மூலையில் தேனீக்கள் கூடு கட்டி இருந்ததால் அந்த கூட்டை அழிப்பதற்காக ஓட்டல் ஊழியர்கள் தீ வைத்துள்ளனர். அப்போது காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென கூடாரம் முழுவதும் பரவியது தெரியவந்தது.
கும்பகோணத்தில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீப்பிடித்து எரிந்ததில் மர சாமான்கள் எரிந்து நாசமாயின.
தீ விபத்து நடைபெற்ற கட்டிடத்தின் அருகே 10 ஆயிரம் மாணவ, மாணவிகள் படிக்கும் பள்ளி, ரெயில் நிலையம், குடியிருப்புகள், தொழிற்சாலைகள் உள்ளன. கட்டிடத்தில் இருந்து தீ பரவினால் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் இருந்தது. இந்த நிலையில் 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் உரிய நேரத்தில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.