கார் உதிரி பாகம் விற்பனை கடையில் தீ; ரூ.1 கோடி பொருட்கள் நாசம்
கார் உதிரி பாகம் விற்பனை கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1 கோடி பொருட்கள் நாசமானது.
கொழுந்துவிட்டு எரிந்த தீ
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்தில் உள்ள ரஞ்சன்குடியை சேர்ந்தவர் இளையராஜா (வயது 42). இவர், பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நான்குரோடு சந்திப்பிற்கு செல்லும் சாலையில் ஓம் சக்தி என்ற பெயரில், கார் உதிரி பாகங்கள், டயர் விற்பனை, வீல் அலைன்மென்ட் மற்றும் கார் சர்வீஸ் செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் காலை இளையராஜா சாமி கும்பிட்டுவிட்டு, கடையை பூட்டிவிட்டு தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்றுவிட்டார். இந்தநிலையில் காலை 10.30 மணியளவில் திடீரென்று இளையராஜாவின் கடையில் தீப்பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதியில் அதிக அளவில் கரும்புகை எழுந்தது. தீ கொழுந்துவிட்டு எரிந்ததை பார்த்த பொதுமக்கள், உடனடியாக இது பற்றி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர்.
ரூ.1 கோடி பொருட்கள் நாசம்
அதன்பேரில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனத்தில் விரைந்து வந்தனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனர். சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது.
இந்த தீ விபத்தில் கடையில் இருந்த கணினிகள், பழுது நீக்குவதற்காக வைத்திருந்த ஜீப் மற்றும் கார் உதிரி பாகங்கள், இலகுரக வாகனங்களின் தளவாடப் பொருட்கள் உள்பட சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.
மின்கசிவு காரணமாக...
இதற்கிடையே கடையின் உரிமையாளர் இளையராஜாவிற்கும் அக்கம், பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பதறியடித்துக் கொண்டு தனது கடைக்கு வந்து பார்வையிட்டார். பின்னர் இது குறித்து பெரம்பலூர் போலீசில் இளையராஜா புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவின் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் தீ விபத்திற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூரில் கார் உதிரிபாகங்கள் விற்பனை கடை தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.