கோட்டை பூங்காவில் தீ விபத்து
வேலூர் கோட்டை பூங்காவில் தீ விபத்து ஏற்பட்டது.
வேலூர் கோட்டை முன்பு பூங்கா அமைந்துள்ளது. இங்குள்ள காந்தி சிலையின் வலதுபுறம் உள்ள பூங்காவில் பொதுமக்கள் அமர்ந்து பொழுது போக்குவார்கள். இடதுபுற பூங்காவில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளதால் அங்கு மக்கள் பொழுதுபோக்க முடியாது. மேலும் அங்கு மக்கள் செல்ல தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக அந்தப் பகுதியில் வெட்டப்படும் புற்கள் அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் மர்மநபர்கள் அதில் தீ வைத்தனர். தீ மளமளவென பரவியது. இதைப் பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் வேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். தீ எரிந்த போது சாலையில் சென்ற பொதுமக்கள் அங்கு கூடி நின்று வேடிக்கை பார்த்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.