பழைய இரும்பு குடோனில் தீ விபத்து
பேட்டையில் பழைய இரும்பு குடோனில் தீ விபத்து
பேட்டை:
நெல்லையை அடுத்த பேட்டை செக்கடி சுந்தரவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் பிச்சையா (வயது 63). இவர் பேட்டை- சேரன்மாதேவி சாலை செக்கடி அருகில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். அங்குள்ள குடோனில் பழைய பேப்பர்கள், பிளாஸ்டிக், இரும்பு பொருட்கள் போன்றவற்றை வைத்திருந்தார்.
இந்த நிலையில் குடோனில் உள்ள பேப்பர் கட்டுகளில் நேற்று மதியம் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. அப்போது காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென்று பரவியது. இதுகுறித்து பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு நிலைய அலுவலர் முத்தையா தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பழைய பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
இதுகுறித்து பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நேற்று அப்பகுதி வழியாக சவ ஊர்வலம் சென்றபோது பட்டாசு வெடித்ததில், தீப்பொறி பறந்து விழுந்ததில் குடோனில் தீப்பிடித்ததா? அல்லது மின்கசிவால் தீ விபத்து நிகழ்ந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்து காரணமாக, அந்த வழியாக சென்ற வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர்.