வலம்புரிவிளை கிடங்கில் 3-வது நாளாக பற்றி எரிந்த தீ
நாகர்கோவில் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் 3-வது நாளாக தீப்பற்றி எரிவதால் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் 3-வது நாளாக தீப்பற்றி எரிவதால் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
குப்பை கிடங்கில் தீ விபத்து
நாகர்கோவில் மாநகரில் வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் இருந்து தினசரி குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகளில் 60 டன்கள் மாநகரில் 12 இடங்களில் உள்ள உரமாக்கும் கூடத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு உரமாக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள குப்பைகள் பீச்ரோடு வலம்புரிவிளையில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அங்கு குப்பைகள் மலைபோல கிடக்கின்றன. அந்த குப்பைகளை பயோ மெட்ரிக் முறையில் உரமாக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் கடந்த 29-ந் தேதி மாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. முதலில் குப்பை குவியலில் சிறிது இடத்தில் மட்டும் லேசாக எரிந்து கொண்டு இருந்த தீயானது நேரம் செல்ல செல்ல காற்று வேகமாக வீசியதால் தீ பல இடங்களுக்கு வேகமாக பரவியது.
3-வது நாளாக...
இதைத்தொடர்ந்து சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே மேற்கொண்டு தீ பரவாமல் இருக்கும் வகையில் தீ பிடிக்காத இடங்களில் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். ஆனாலும் தொடர்ந்து 2 நாட்களாக தீ எரிந்து வந்தது. ஆனாலும், தீ பரவுவதை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதனால் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் நேற்று 3-வது நாளாக தீ பற்றி எரிந்தது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் படாதபாடுபட்டு வருகின்றனர். அதன்படி நாகர்கோவில், கன்னியாகுமரி, குலசேகரம் மற்றும் தக்கலையை சேர்ந்த சுமார் 50 வீரர்கள் இந்த பணியில் ஈடுபட்டு உள்ளனர். பொக்லைன் எந்திரம் மூலம் குப்பைகளை கிளறி விட்டு தீயை அணைக்கும் பணி நடந்தது.
எனினும் தீயை முழுமையாக அணைக்க முடியவில்லை.
நச்சு புகையால் அவதி
இதற்கிடையே குப்பையில் பற்றி எரியும் தீயில் இருந்து குபுகுபுவென நச்சு புகை வெளியேறியது. அந்த புகையானது காற்று வீசும் திசையில் பரவியது. அந்த வகையில் வட்டவிளை, வேதநகர் மற்றும் இளங்கடை ஆகிய இடங்களில் நச்சு புகை மூட்டமாக காட்சி அளித்தது. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
இதற்கிடையே வலம்புரிவிளை குப்பை கிடங்கில் குப்பைகளை தனித்தனியாக பிரித்தெடுக்க எந்திரம் பொருத்தும் பணியும் ஒருபுறம் நடைபெற்று வருகிறது.