அண்ணாநகர் வணிக வளாகத்தில் தீ விபத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
அண்ணாநகர் வணிக வளாகத்தில் தீ விபத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தீயணைப்புத்துறை சார்பில் நடைபெற்றது.
மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் 'தீ பாதுகாப்பு விழிப்புணர்வு தேசிய உள்கட்டமைப்பின் வளர்ச்சி' என்ற தலைப்பில் தீயணைப்புத்துறை சார்பில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பள்ளி-கல்லூரிகள் போன்ற இடங்களில் கடந்த 14-ந்தேதி முதல் தீ விபத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி சென்னை அண்ணாநகரில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் தீயணைப்புத்துறை இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன் தலைமையில் மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரி சரவணன் முன்னிலையில் தீ விபத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு கருவிகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.
மேலும் இந்த வணிக வளாகத்துக்கு வந்திருந்த பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
அதேபோல் தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில் சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் கோயம்பேடு தீயணைப்பு அதிகாரி ராஜேந்திரன் தலைமையில் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தீ விபத்து பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களும் ஒவ்வொரு பஸ்சாக ஏறி பயணிகளிடம் வழங்கினர்.