பட்டாசு வெடித்தபோது 14 இடங்களில் தீ விபத்து
தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடித்தபோது 14 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 4 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலானது.
கடலூர்:
இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி நேற்று முன்தினம் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கடலூர் மாவட்டத்திலும் தீபாவளி பண்டிகையை பொதுமக்கள், புத்தாடை அணிந்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி மகிழ்ந்தனர். ஒருவருக்கொருவர் நேரிலும், வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்களிலும் தீபாவளி வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.
பட்டாசு வெடித்து தீ விபத்து ஏற்பட்டால் அதனை உடனடியாக அணைக்க கடலூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் தலைமையில் கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி உள்ளிட்ட 15 தீயணைப்பு நிலையங்களிலும் 292 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருந்தனர். அவர்கள் தீயணைப்பு வாகனம் மற்றும் மீட்பு கருவிகளுடன் தயார் நிலையில் இருந்தனர்.
குடிசை வீடுகள் எரிந்து சாம்பல்
பட்டாசு வெடித்ததாலும், ராக்கெட் வெடி வெடித்தாலும் 14 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவம் அறிந்ததும் அந்தந்த பகுதியில் உள்ள தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதில் 4 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலானது. இதில் அதிகபட்சமாக பண்ருட்டி தீயணைப்பு நிலைய எல்லை பகுதியில் 7 இடங்களில் தீ விபத்து நடந்ததாக தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.