ஏலகிரி மலையில் 6 இடங்களில் தீ விபத்து
ஏலகிரி மலையில் 6 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் மரங்கள் எரிந்து நாசமானது.
ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி மலையடிவார பகுதிகளில் சமூக விரோதிகள் மது அருந்திவிட்டு, புகை பிடித்து தீயை அணைக்காமல் போட்டு விடுவதால் சருகுகள் மூலம் பெரிய அளவில் தீப்பற்றி எரிகிறது. கடந்த மாதத்தில் ஏலகிரி மலையில் 5 முறை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மர்ம நபர்கள் நேற்று மாலை காட்டுக்கு தீ வைத்து சென்றுள்ளனர். இதில் மலையின் உச்சி பகுதிவரை தீ பரவியது. 6 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அரிய வகை மரங்கள், மூலிகை செடிகள், வன விலங்குகள் தீயில் பாதிக்கப்பட்டன.
மேலும் ஊசி நாட்டான் வட்டம் சந்தைக்கோடியூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருக்கும் வீடுகளின் மேற்கூரையில் சாம்பல் விழுகிறது. இதனால் பெண்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே இதுபோன்ற சமூக விரோத செயலில் ஈடுபடும் மர்மநபர்களை வனத்துறையினர் கண்காணித்து அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.