ஓடும் காரில் தீ; 2 பேர் உயிர் தப்பினர்
லால்குடியில் ஓடும் காரில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில் காரில் இருந்த 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
லால்குடியில் ஓடும் காரில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில் காரில் இருந்த 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ஓடும் காரில் தீ
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே மேலகம்பேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் கோபால் (வயது 25). இவரும் அதே பகுதியை சேர்ந்த உறவினர் ராஜகணேஷ் (45) என்பவரும் அரியலூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் கோபாலின் சகோதரரை தீபாவளி பண்டிகையையொட்டி அழைத்து வருவதற்காக காரில் சென்றனர்.காரை கோபால் ஓட்டி வந்தார். கார் திருச்சி - சிதம்பரம் நான்கு வழிச்சாலையில் லால்குடி பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது, காரில் இருந்து திடீரென்று பெட்ரோல் வாடை வீசியது. அதே நேரத்தில் காரில் இருந்து புகை வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் காரில் இருந்து இறங்கினர். பின்னர் சில நொடிகளில் கார் தீப்பற்றி எரிந்தது. சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
உயிர் தப்பினர்
இதுகுறித்து அப்பகுதி மக்கள் சமயபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். எனினும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது.
காரில் இருந்து உடனடியாக இறங்கியதால் கோபால், ராஜகணேஷ் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.இந்த சம்பவத்தால் லால்குடியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.