தோல் குடோனில் தீ விபத்து
ஆம்பூர் அருகே தோல் பொருட்கள் குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.
குடோனில் தீ விபத்து
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த பாங்கி ஷாப் பகுதியில் இயேசு ராஜா என்பவருக்கு சொந்தமான அட்டைப்பெட்டி மற்றும் தோல் பொருட்கள் சேமித்து வைக்கும் குடோன் உள்ளது. இந்த குடோனில் இருந்து நேற்று காலை சுமார் 8 மணி அளவில் திடீரென புகை வந்துள்ளது. இதைபார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது குறித்து கடை உரிமையாளருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
அதற்குள் குடோன் தீ பற்றி எரியத் தொடங்கியது. குடோன் முழுவதும் தீ பரவி மளமளவென எரியத் தொடங்கியது. மேலும் அருகில் இருந்த மினி லாரியிலும் தீ பற்றிக்கொண்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உமராபாத் போலீசார் மற்றும் ஆம்பூர் தீயணைப்புத் துறையினர் சில மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் சில மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
எரிந்து நாசம்
தீ விபத்தில் குடோனில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான அட்டைப்பெட்டிகள், தோல் பொருட்கள் மற்றும் மினிலாரி முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் மகாலட்சுமி நேரில் ஆய்வு செய்தார்.
இந்த தீ விபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்டதா அல்லது வேற ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் உமராபாத் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.