பழனி அருகே பிளாஸ்டிக் பாட்டில்கள் அரைக்கும் மையத்தில் பயங்கர தீ
பழனி அருகே பிளாஸ்டிக் பாட்டில்கள் அரைக்கும் மையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
பழனியை அடுத்த சிவகிரிப்பட்டி ஊராட்சி இடும்பன்நகரில் சமுதாயக்கூடம் உள்ளது. இந்த சமுதாயக்கூட கட்டிடத்தில் பிளாஸ்டிக் குப்பைகள் அரைக்கும் மையம் செயல்பட்டு வருகிறது. ஊராட்சி பகுதியில் சேகரமாகும் பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட குப்பைகள் எந்திரம் மூலம் அரைத்து வணிக பயன்பாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்காக கட்டிடத்தில் பிளாஸ்டிக் பாட்டில்கள் மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்டு உள்ளன. நேற்று விடுமுறை என்பதால் சமுதாயக்கூட கட்டிடம் பூட்டி இருந்தது.
இந்தநிலையில் நேற்று மாலை திடீரென கட்டிடத்தின் உள்பகுதியில் இருந்து புகை வெளியேறியது. சிறிதுநேரத்தில் தீ மள, மளவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள், பழனி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் நிலைய அலுவலர் பாஸ்கரன் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். எனினும் மையத்தில் இருந்து குப்பை அரைக்கும் எந்திரம், பிளாஸ்டிக் பாட்டில்கள் தீயில் எரிந்தது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்ததால் அருகில் உள்ள கட்டிடங்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இந்த தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினர் கூறும்போது, கட்டிடத்தில் மின்வயரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீப்பிடித்துள்ளது என்றனர்.