பட்டு வளர்ப்பு கூடத்தில் தீ
வத்தலக்குண்டு அருகே பட்டு வளர்ப்பு கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
வத்தலக்குண்டு அருகே, பழைய வத்தலக்குண்டு விராலிப்பட்டி சாலையில் பொன்னையா என்பவருக்கு சொந்தமான பட்டு வளர்ப்புக்கூடம் உள்ளது. இந்த பட்டு வளர்ப்புக்கூடத்தில் நேற்று திடீரென தீப்பிடித்தது. சிறிதுநேரத்தில் தீ மள, மளவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த வத்தலக்குண்டு தீயணைப்பு நிலைய அலுவலர் விவேகானந்தன் தலைமையிலான தீயணைப்பு படையினர் அங்கு விரைந்தனர். பின்னர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இருப்பினும் பட்டு வளர்ப்புக்கூடத்தில் உள்ள ரேக்குகள், பிளாஸ்டிக் குழாய்கள், கயிறுகள், பட்டுக்கூடுகள் என அனைத்தும் தீயில் கருகி நாசமாயின. சேதமடைந்த பொருட்களின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என்று தீயணைப்பு படையினர் தெரிவித்தனர். பட்டு வளர்ப்பு கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் குறித்து வத்தலக்குண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.