டயர் வெடித்ததால் லாரியில் திடீரென தீப்பிடித்தது


டயர் வெடித்ததால் லாரியில் திடீரென தீப்பிடித்தது
x
தினத்தந்தி 13 Oct 2022 12:15 AM IST (Updated: 13 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஓசூர் அருகே எம்.சேண்ட் மணல் பாரம் ஏற்றிசென்ற லாரி டயர் வெடித்து திடீரென தீப்பிடித்தது. இதில் டிரைவர், கிளீனர் உயிர் தப்பினர்.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் அருகே எம்.சேண்ட் மணல் பாரம் ஏற்றிசென்ற லாரி டயர் வெடித்து திடீரென தீப்பிடித்தது. இதில் டிரைவர், கிளீனர் உயிர் தப்பினர்.

லாரியில் தீப்பிடித்தது

ஓசூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் உள்ள கல் குவாரிகளில் இருந்து கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் எம். சாண்ட் மணல், ஜல்லிகற்கள் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் டிப்பர் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. நேற்று, ஓசூர் பேரண்டப்பள்ளி பகுதியில் உள்ள ஒரு கல்குவாரியில் இருந்து டிப்பர் லாரியில் எம்.சாண்ட் மணல் ஏற்றி கொண்டு பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த லாரியை, பெங்களூரு உலிமாவு பகுதியை சேர்ந்த டிரைவர் மிதுன் ஓட்டினார். உடன் கிளீனர் சென்றார். ஓசூர் காந்திநகரில் சென்றபோது லாரியின் பின்பக்க டயர் வெடித்தது. இதில் லாரி டயரில் திடீரென தீப்பிடித்து மளமளவென பரவி, டயர் எரிந்தது. இதனால் டிரைவர், கிளீனர் ஆகியோர் லாரியை நிறுத்தி விட்டு கீழே இறங்கி உயிர் தப்பினர்.

போலீசார் விசாரணை

இந்த தீவிபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் கடும் புகை மூட்டமாக காணப்பட்டது. மேலும் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் ஓசூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

தீயணைப்பு படையினர் நடத்திய விசாரணையில் அதிக பாரம் காரணமாக டயர்களில் ஏற்பட்ட உராய்வில், லாரி டயரில் தீ பிடித்தது தெரிய வந்துள்ளது. இது குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story