ஒரே நாளில் 2 தும்பு ஆலைகளில் தீ விபத்து


ஒரே நாளில் 2 தும்பு ஆலைகளில் தீ விபத்து
x

நாகர்கோவில் அருகே உள்ள 2 தும்பு ஆலைகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்ச ரூபாய் பொருட்களும், 20 தென்னை மரங்களும் எரிந்து நாசமானது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவில் அருகே உள்ள 2 தும்பு ஆலைகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்ச ரூபாய் பொருட்களும், 20 தென்னை மரங்களும் எரிந்து நாசமானது.

தனியார் தும்பு ஆலையில் தீ

நாகர்கோவில் புத்தளம் அருகே தனியாருக்கு சொந்தமான ஏராளமான தும்பு ஆலைகள் உள்ளன. அந்த வகையில் நாகர்கோவில் முகிலன்குடியிருப்பை சேர்ந்த தண்டாயுதபாணி என்பவருக்கு சொந்தமான தும்பு ஆலை அங்கு செயல்பட்டு வந்தது. இவரது ஆலையின் அருகே கீழ கிருஷ்ணன்புதூரை சேர்ந்த தியாகராஜன் என்பவரது தும்பு ஆலையும் உள்ளது. நேற்று இந்த 2 தும்பு ஆலைகளிலும் தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர்.

அப்போது மதியம் 3 மணியளவில் தண்டாயுதபாணிக்கு சொந்தமான தும்பு ஆலையில் உள்ள ஒரு அறையில் இருந்து புகை கிளம்பியது. உடனே தொழிலாளர்கள் அந்த அறைக்கு சென்று பார்த்தபோது, அங்கு வைக்கப்பட்டு இருந்த தென்னை தும்புகள் தீ பிடித்து எரிந்து கொண்டு இருந்தன. தீ குபுகுபுவென எரியத் தொடங்கியது.

தென்னை மரங்கள் எரிந்து நாசம்

காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென அந்த ஆலை முழுவதும் பரவியது. இதனால், அருகில் நின்றிருந்த தென்னை மரங்களிலும் தீப்பற்றியது. இதுபற்றி நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட உதவி தீயணைப்பு அதிகாரி துரை தலைமையில் வீரர்கள் 2 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

இதற்கிடையே அந்த தீ தும்பு ஆலையின் அருகே இருந்த தியாகராஜன் என்பவரின் தும்பு ஆலைக்கும் பரவி எரிய தொடங்கின. சரியான நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். சுமார் 1 மணி நேரம் போராடி தியாகராஜனின் தும்பு ஆலையில் பற்றி எரிந்த தீயை முற்றிலுமாக அணைத்தனர். இதற்கிடையே தண்டாயுதபாணியின் தும்பு ஆலையில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

மின்கசிவு காரணமா?

ஆனாலும் தீ கட்டுக்குள் வரவில்லை. தொடர்ந்து தீ கொளுந்துவிட்டு எரிந்தது. அதேசமயம் தும்பு ஆலைகளின் அருகே உள்ள தென்னை மரங்களில் பற்றி எரிந்த தீயை வீரா்கள் அணைத்தனர். இதில் 20-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் தீயில் கருகி நாசமாகியது. தும்பு ஆலையில் ஏற்பட்ட தீயை 7 மணி நேரம் போராடி வீரா்கள் அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஆலையில் இருந்த தும்புகள், எலக்ட்ரானிக் பொருட்கள், கணினி, பீரோ, நாற்காலிகள் உள்பட ஏராளாமான பொருட்கள் தீயில் கருகி நாசமாகின.

தீ விபத்துக்கான காரணம் குறித்து தீயணைப்பு வீரர்கள் கூறுகையில்:- ஆலையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து நாசமான பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.10 லட்சத்திற்கும் மேல் இருக்கும். சரியான நேரத்தில் மற்றொரு ஆலையில் ஏற்பட்ட தீயை அணைத்ததால் அங்கு பொருட்கள் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது என்றனர்.


Next Story