பழைய பிளாஸ்டிக் பாட்டில் குடோனில் தீ விபத்து
புதுக்கோட்டையில் பழைய பிளாஸ்டிக் பாட்டில் குேடானில் தீ விபத்து ஏற்பட்டது.
பிளாஸ்டிக் பாட்டில் குடோனில் தீ
புதுக்கோட்டை வடக்கு 4-ம் வீதியில் பழைய பிளாஸ்டிக் பாட்டில், பழைய இரும்பு பொருட்கள் குடோன் உள்ளது. இதனை நியாஸ் என்பவர் நிர்வகித்து வருகிறார். குடோனில் ஏராளமான பழைய பிளாஸ்டிக் பாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள் உள்பட பழைய பொருட்கள் குவிந்து கிடக்கின்றன.
இந்த நிலையில் நேற்று இரவு இந்த குடோனில் இருந்து திடீரென கரும்புகை வெளியே வந்தது. பழைய பிளாஸ்டிக் பாட்டில்கள் குவித்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் தீ மளமளவென பிடித்து எரிந்தது. இது குறித்து அப்பகுதியினர் உடனடியாக புதுக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
பொருட்கள் சேதம்
தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர். தீயணைப்பு துறையினர் 2 வாகனங்களில் தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு அணைக்கப்பட்டது.
இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தில் பழைய பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பொருட்கள் என பல்லாயிரக்கணக்கான ரூபாய் மதிப்பில் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.