பெருந்துறை அருகே தீ விபத்து: கார்- மோட்டார்சைக்கிள் எரிந்து நாசம்
தீ விபத்து:
பெருந்துறை அருகே ஏற்பட்ட தீ விபத்தில் கார் மற்றும் மோட்டார்சைக்கிள் எரிந்து நாசம் ஆனது.
புகை
பெருந்துறையை அடுத்த திங்களூர் அருகே உள்ள கிரே நகர் ரங்கங்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் மணி. இவருடைய வீட்டையொட்டி ஓட்டுக்கொட்டகை உள்ளது. இந்த ஓட்டுக்கொட்டகைக்குள் கார் மற்றும் பழைய மோட்டார்சைக்கிளை அவர் நிறுத்தி இருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணிஅளவில், ஓட்டு கொட்டகைக்குள் இருந்து புகை வந்து உள்ளது. புகையை கண்டதும் பதறியடித்துக்கொண்டு வீட்டை விட்டு மணி வெளியே வந்தார்.
கார்- மோட்டார்சைக்கிள் எரிந்து நாசம்
அப்போது ஓட்டுக்கொட்டகைக்குள் நிறுத்தப்பட்டிருந்த காா் மற்றும் மோட்டார்சைக்கிள் கொழுந்துவிட்டு எரிந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தாா். உடனே அவர் இதுகுறித்து பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
தகவல் அறிந்ததும் நிலைய அதிகாரி நவீந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் கார் மற்றும் மோட்டார்சைக்கிள் எரிந்து நாசம் ஆனது.
மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து திங்களூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.