ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்ததில் போலீஸ் ஏட்டு உடல் கருகி பலி
உத்தமபாளையம் அருகே மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்தது. இதில், போலீஸ் ஏட்டு உடல் கருகி பலியானார்.
உத்தமபாளையம் அருகே மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்தது. இதில், போலீஸ் ஏட்டு உடல் கருகி பலியானார்.
ஆம்னி பஸ்
தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து நேற்று இரவு 9.30 மணி அளவில் பெங்களூரு நோக்கி ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டது. அந்த பஸ்சில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் வந்தனர். பஸ்சை உத்தமபாளையத்தை சேர்ந்த பீர்முகமது (வயது 45) என்பவர் ஓட்டினார். உத்தமபாளையத்தை அடுத்த துர்க்கை அம்மன் கோவில் பகுதியில் அந்த பஸ் 9.45 மணி அளவில் சென்று கொண்டிருந்தது.
இதேபோல் சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்த ராமகிருஷ்ணன் (40) மோட்டார் சைக்கிளில் எதிரே வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆம்னி பஸ்சும், மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதிக்கொண்டன.
போலீஸ் ஏட்டு பலி
இதில், மோட்டார் சைக்கிள் பஸ்சின் முன்பகுதியில் சிக்கியது. அதேபோல் மோட்டார் சைக்கிள் மோதிய வேகத்தில் பஸ்சின் முன்பகுதியில் இருந்த பெட்ரோல் டேங்கில் கசிவு ஏற்பட்டு, தீப்பிடித்தது. அப்போது பஸ்சின் முன்பகுதி பற்றி எரிந்ததுடன், மோட்டார் சைக்கிளில் வந்த ராமகிருஷ்ணன் மீதும் தீப்பிடித்தது. இதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.
இதற்கிடையே பஸ் தீப்பிடித்து எரிவதை பார்த்ததும் அதில் வந்த பயணிகள் அலறியடித்தபடி பஸ்சில் இருந்து வேகமாக இறங்கினர். இதனால் அவர்கள் உயிர் தப்பினர். டிரைவரும் சுதாரித்துக்கொண்டு பஸ்சில் இருந்து இறங்கினார். சிறிது நேரத்தில் பஸ் முழுவதுமாக தீப்பிடித்து எரிய தொடங்கியது.
தீயை அணைத்தனர்
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் உத்தமபாளையம் மற்றும் சின்னமனூர் போலீசார், தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது தீயணைப்பு படையினர் தீப்பிடித்து எரிந்த பஸ் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். சுமார் அரை மணி நேரம் போராடி பஸ்சில் எரிந்த தீயை அணைத்தனர்.
பின்னர் தீயில் கருகி இறந்த ஏட்டு ராமகிருஷ்ணனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்ததில் போலீஸ் ஏட்டு உடல் கருகி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பலியான ராமகிருஷ்ணனுக்கு திருமணமாகி மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.