தீ விபத்து தடுப்பு விழிப்புணர்வு செயல்விளக்கம்
தீயணைப்பு துறை சார்பில் தீ விபத்து தடுப்பு விழிப்புணர்வு செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
ஓசூர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் தீயணைப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு செயல்விளக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவ அலுவலர் ஞானமீனாட்சி, தீயணைப்பு துறை உதவி அலுவலர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திடீரென தீ விபத்து நேரிட்டால், அதனை அணைப்பது மற்றும் விபத்தில் இருந்து தங்களை பாதுகாத்துகொள்வது, கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து உதவி தீயணைப்பு அலுவலர் ராமன் மற்றும் வீரர்கள் செயல்விளக்கம் செய்து காண்பித்தனர். இதில் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள், மருந்தாளுனர் ராஜசேகரன் மற்றும் ஊழியர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு பார்வையிட்டனர். இதேபோல், ஓசூர் ராமநாயக்கன் ஏரி அருகில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில் குளம் அருகிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
சிகரலப்பள்ளி ஏரியில்...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏரி, குளம், குட்டைகள், ஆறுகள் மற்றும் கிணறுகளில் தவறி விழுந்தோ, நீச்சல் தெரியாமலோ, விழுந்து ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இறந்து விடுகின்றனர். இதை எதிர்கொள்ள பர்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் சிகரலப்பள்ளி ஏரியில் தவறி விழுந்தவரை எவ்வாறு காப்பாற்ற வேண்டும் எனவும், அவர்கள் தண்ணீரில் தத்தளிக்கும் போது கூக்குரல் கொடுப்பது போலவும், அவர்களை உடனடியாக மீட்பது போலவும் ஒத்திகை தடுப்பு நிகழ்ச்சியை பொதுமக்களிடையே செயல் விளக்கம் செய்து காட்டினார்கள்.
இந்த விடுமுறை காலங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூட்டமாகச் சென்று குளிக்கும்போது கவனமாக இருக்க வேண்டும் நீச்சல் தெரியாதவர்கள் தங்களுடன் வருபவர்களிடம் அதை பற்றி கூறி அவர்களையும் உடன் அழைத்துச் சென்று பொறுமையாக நீச்சல் கற்றுக் கொள்ள வேண்டும். எனவும் அவர்கள் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள் இதில் தீயணைப்பு நிலைய அலுவலர் தர்மலிங்கம் தலைமையில் வீரர்கள் கலந்து கொண்டனர்.