தீத்தடுப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


தீத்தடுப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
x

வேலூரில் நடந்த தீத்தடுப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை தீயணைப்புத்துறை வடமேற்கு மண்டல துணை இயக்குனர் சரவணகுமார் தொடங்கி வைத்தார்.

வேலூர்

தீத்தடுப்பு வாரம்

இந்தியா முழுவதும் மீட்பு பணியின்போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் ஏப்ரல் 14-ந்தேதி தீயணைப்பு வீரர்கள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் அதனை நினைவுகூறும் விதமாக ஒரு வாரம் தீத்தடுப்பு வாரமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

தீ பாதுகாப்பு குறித்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீயணைப்புத்துறையினர் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கடந்த 16-ந்தேதி வேலூரில் தீத்தடுப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடந்தது.

விழிப்புணர்வு ஊர்வலம்

இந்த நிலையில் வடமேற்கு மண்டல தீயணைப்புத்துறை சார்பில் தீத்தடுப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் நடந்தது. வேலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சேகர், வேலூர் மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் அப்துல்பாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடமேற்கு மண்டல துணை இயக்குனர் சரவணகுமார் தலைமை தாங்கி ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் இருந்து தொடங்கிய ஊர்வலம் நேஷனல் சர்க்கிள், ஆரணி சாலை, மக்கான் சிக்னல், அண்ணா சாலை வழியாக சென்று வேலூர் தீயணைப்பு நிலையத்தில் நிறைவு பெற்றது.

இதில், தீயணைப்பு வீரர்கள், போலீசார், என்.சி.சி., என்.எஸ்.எஸ். மாணவ-மாணவிகள் பலர் கலந்துகொண்டு 'மின்சார தீயை அணைப்பதற்கு தண்ணீரை பயன்படுத்தாதீர்கள்', 'தீ தடுக்கும் முறையை அனைவருக்கும் கற்று கொடுங்கள்', 'தற்காப்புடன் தீயை எதிர்த்து போராடுங்கள்' என்பது உள்பட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஊர்வலத்தில் வேலூர் மாவட்ட தீயணைப்புத்துறை உதவி அலுவலர்கள் முகுந்தன், பழனி, வேலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் தணிகைவேல் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story