மருத்துவமனைகள் அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவுரை


மருத்துவமனைகள் அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்  பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவுரை
x
தினத்தந்தி 20 Oct 2022 12:15 AM IST (Updated: 20 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் மருத்துவமனைகள் அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என பொதுமக்களுக்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் அறிவுறுத்தியுள்ளார்.

கடலூர்

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதே வேளையில், பட்டாசுகளை வெடிப்பதால், நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறுகுழந்தைகள், பெரியோர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டுள்ள வயோதிகர்கள் உடல் அளவிலும், மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

மேலும் சுற்றுச்சூழலை, பாதிப்பு இல்லாமல், பேணிக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும், பொறுப்பும் ஆகும். அதனை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் தீபாவளி பண்டிகை நாளில் கீழ்கண்டவற்றை கடைபிடிக்க வேண்டும்.

சரவெடிகள் தவிர்ப்பு

* பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.

* பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பசுமை பட்டாசுகளை வெடிக்கவேண்டும்.

* அதிக ஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும்.

* மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

* குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

ஆகவே, பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில், உரிய இடங்களில், கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுங்கள்.

மேற்கண்ட தகவல் கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story