பேரிடர் கால நடவடிக்கைகள் குறித்து தீயணைப்பு துறையினர் ஒத்திகை
பேரிடர் கால நடவடிக்கைகள் குறித்து தீயணைப்பு துறையினர் ஒத்திகையில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் பழைய நகராட்சி அலுவலகம் அருகே உள்ள தெப்பக்குளத்தில் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை மாவட்ட பேரிடர் மேலாண்மை துறை மற்றும் தீயணைப்பு துறை சார்பாக நேற்று மாலை நடந்தது. பேரிடர் காலங்களில் வெள்ளத்தினாலோ அல்லது தீயினாலோ ஏதாவது அபாயம் ஏற்பட்டால் பொதுமக்கள் தங்களை எவ்வாறு தற்காத்து கொள்வது என்பது குறித்தும், எவ்வாறு மீட்பு பணியில் ஈடுபடுவது குறித்தும் தீயணைப்புத்துறை வீரர்கள் செயல் விளக்கத்தினை பொதுமக்களுக்காக தத்ரூபமாக செய்து காண்பித்தனர்.
இதனை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ அல்லது உதவி தேவைப்பட்டாலோ 1077 மற்றும் 18004254556 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றார். இதில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா, பேரிடர் மேலாண்மைத் துறை தாசில்தார் பாரதிவளவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.