கெலமங்கலம் அருகே பரபரப்புபட்டாசு ஆலை வெடிவிபத்தில் அதிகாரி உள்பட 3 பேர் படுகாயம்ஆய்வுக்காக சென்ற போது சம்பவம்
ராயக்கோட்டை
கெலமங்கலம் அருகே பட்டாசு ஆலையில் ஆய்வுக்காக சென்ற போது நடந்த வெடிவிபத்தில் அதிகாரி உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-
பட்டாசு ஆலை
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள ஜெ.காரப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது வெங்கடாபுரம் கிராமம். இங்கு தனியாருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இதை கேரள மாநிலத்தைச் சேர்ந்த சாபு புருஷோத்தமன், சஞ்சு ஆகியோர் நடத்தி வருகிறார்கள். இங்கு பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த மாதம் 29-ந் தேதி கிருஷ்ணகிரி பழையபேட்டை பட்டாசு குடோனில் நடந்த விபத்தில் 9 பேர் பலியானார்கள். 15 பேர் படுகாயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் உள்ள பட்டாசு குடோன்கள் மற்றும் கடைகளை ஆய்வு செய்ய மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதற்காக சிறப்பு குழுக்களும் அமைக்கப்பட்டன.
3 பேர் படுகாயம்
இந்த நிலையில் ஓசூர் நில வரி திட்ட தனி மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி (வயது52) தலைமையில் தனி தாசில்தார் முத்துபாண்டி (47), தேன்கனிக்கோட்டை தாசில்தார் சரவணமூர்த்தி உள்ளிட்டோர் நேற்று மதியம் வெங்கடாபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையை ஆய்வு செய்வதற்காக சென்றனர்.
அப்போது ஆலையில் இருந்த பட்டாசுகள், வெடி மருந்து பெட்டிகள் கீழே தவறி விழுந்தன. இதில் ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்து சிதறின இந்த விபத்தில் தனி மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி, தாசில்தார் முத்துபாண்டி, பட்டாசு குடோன் மேலாளரான மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா மூக்கம்பட்டி ஸ்ரீமந்த் (30) ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்து அவர்களை மீட்டனர்.
தீயணைப்பு துறையினர் விரைந்தனர்
பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலமாக அவர்கள் 3 பேரும் ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து அந்த பகுதியில் இருந்தவர்கள் கெலமங்கலம் போலீசாருக்கும், ஓசூர் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு துறையினர் வாகனத்தில் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கெலமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விரைந்து வந்தனர்.
இந்த நிலையில் விபத்து பற்றி அறிந்த மாவட்ட கலெக்டர் சரயு, ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தார். அவர் படுகாயம் அடைந்த பாலாஜி, முத்துபாண்டி, ஸ்ரீமந்த் ஆகியோருக்கு உரிய சிகிச்சை அளிக்க டாக்டர்களுக்கு உத்தரவிட்டார். இந்த கோர விபத்தில் ஸ்ரீமந்திற்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. 90 சதவீதம் வரையில் அவருக்கு உடலில் காயங்கள் இருந்ததால் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
அதேபோல மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி மேல் சிகிச்சைக்காக பெங்களூரு செயிண்ட் ஜான்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அதிகாரி முத்துபாண்டி ஓசூரில் சிகிச்சை பெற்று வருகிறார். பட்டாசு ஆலை விபத்துக்கான காரணம் குறித்து கெலமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கெலமங்கலம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் அதிகாரிகள் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.