பட்டாசு தொழில் பாதுகாப்பு கருத்தரங்கம்


பட்டாசு தொழில் பாதுகாப்பு கருத்தரங்கம்
x

விருதுநகர் அருகே பட்டாசு தொழில் பாதுகாப்பு பற்றி நடைபெற்ற கருத்தரங்கில் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

விருதுநகர்


விருதுநகர் அருகே பட்டாசு தொழில் பாதுகாப்பு பற்றி நடைபெற்ற கருத்தரங்கில் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கம்

விருதுநகர் அருகே ஆமத்தூரில் தனியார் கல்லூரி வளாகத்தில் பட்டாசு ஆலை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நலன் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, சி.வி. கணேசன் ஆகியோர் பங்கேற்று தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட மூலம் தொழிற்சாலையில் இருந்து மீட்கப்பட்ட 5 வளரிளம் பருவத்தொழிலாளர்களுக்கு தலா ரூ. 25,000 மதிப்பிலும், ஒரு வளர் இளம் பருவத்தொழிலாளிக்கு தலா ரூ.20,000 என மொத்தம் ரூ. 1 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பிலான காசோலைகளை அமைச்சர்கள் வழங்கினர். மேலும் தொழிலக பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார இயக்கம் மூலம் தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கையேட்டினை அமைச்சர்கள் வெளியிட்டனர்.

விபத்துகளை தவிர்க்கலாம்

கருத்தரங்க தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியதாவது:-

விதிமுறைகளை பின்பற்றாமல் சட்டவிரோதமாக செயல்படும் பட்டாசுஆலைகள் மூலம் அதிக விபத்துக்கள் உண்டாகின்றன. அதை தடுக்கும் விதமாக குழு ஆய்வு தொடர்ந்து மேற்கொண்டு கண்காணித்து விதிமுறைகளை மீறும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பினையும், அவர்களுக்கு தேவையான உதவியும் செய்ய அரசு தயாராக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பங்களிப்பு அவசியம்

அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழில் மிகவும் முக்கிய பங்காற்றி வருகிறது. விபத்து என்பது நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்தினால் அதிக பாதிப்பும் ஏற்படுகிறது. அதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு விபத்து இல்லா தமிழகம் என்ற நோக்கத்துடன் இந்த கருத்தரங்கை நடத்தி வருகிறது.

எனவே விபத்தில்லா பட்டாசு உற்பத்தியை மேற்கொள்ள அனைவரின் பங்களிப்பும் அவசியம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பாதுகாப்பு விதிமுறைகள்

தொழிலாளர் நலன் அரசு முதன்மை செயலாளர் மற்றும் ஆணையர் டாக்டர் அதுல் ஆனந்த், தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் முகமதுநசிமுதீன் ஆகியோர் முன்னிலையில் பல்வேறு துறை அதிகாரிகள் பாதுகாப்பு விதிமுறைகள் பற்றி பேசினர்.

தொழிலக பாதுகாப்பு சுகாதார இயக்குனர் செந்தில்குமார், தொழிலாளர் நலத்துறை கூடுதல் ஆணையர் குமரன், பட்டாசு வெடிபொருள் உற்பத்தி சங்க தலைவர் கணேசன், பட்டாசு தொழிலாளர் சங்க பிரதிநிதி தேவா, எரிபொருள் கட்டுப்பாட்டு துறை அலுவலர் கந்தசாமி, மாவட்ட சுற்றுச்சூழல் என்ஜினீயர் சண்முகம், பிரதிநிதி சித்தார்த் ஸ்ரீராம், தேசிய குழந்தை தொழிலாளர் நலத்திட்ட இயக்குனர் நாராயணசாமி, சமூக பாதுகாப்பு அலுவலர் கிரண்நிவாஸ்சங்கர், உதவி வருங்கால வைப்பு நிதி அலுவலர் சுந்தரேசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

முன்னதாக கலெக்டர் மேகநாதரெட்டி வரவேற்றார். இதில் எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், அசோகன், ரகுராமன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story