பள்ளி, கல்லூரிகளில் முதலுதவி குறித்த செய்முறை கல்வி


பள்ளி, கல்லூரிகளில் முதலுதவி குறித்த செய்முறை கல்வி
x

பள்ளி, கல்லூரிகளில் முதலுதவி குறித்த செய்முறை கல்வி

திருப்பூர்

போடிப்பட்டி

பள்ளி, கல்லூரிகளில் முதலுதவி குறித்த செய்முறைக் கல்வி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விபத்துக்கள்

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலாலும், சீராக பராமரிக்கப்படாத சாலைகளாலும் சாலை விபத்துக்கள் என்பது அடிக்கடி நடக்கும் அவலமாக மாறி விட்டது. அதிவேகமாகவும், தாறுமாறாகவும் இயக்கப்படும் வாகனங்கள் விபத்துக்களுக்கு காரணமாகி விடுகிறது. விபத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு முதலுதவி என்பது மிகவும் முக்கியமாக உள்ளது. விபத்தில் சிக்கியவர்களுக்கு முறையான மருத்துவ சிகிச்சை கிடைப்பதற்கு ஆகும் கால அவகாசம் என்பது சூழ்நிலையை பொறுத்து மாறலாம். அதுபோன்ற வாகன விபத்துக்கள் ஏற்படும் சூழலில் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கும் வகையில் அனைத்து விதமான வாகனங்களிலும் முதலுதவிப் பெட்டி வைக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலும் இவை பயன்படுத்த முடியாத நிலையில் பெயரளவுக்கே உள்ளது. மேலும் முதலுதவி குறித்த அடிப்படை அறிவு இல்லாத நிலை பலருக்கும் உள்ளது. எனவே பள்ளி, கல்லூரிகளில் முதலுதவி குறித்த செயல்முறை கல்வி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புள்ளி விபரங்கள்

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

விஞ்ஞானம் வெகு வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் எந்த நொடியில் என்ன நடக்கும் என்பது யாராலும் கணிக்க முடியாத நிலை உள்ளது. இந்தியாவில் விபத்தில் சிக்குபவர்களில் அதிக சதவீதத்தினர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலோ, ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு ஒரு மணி நேரத்துக்குள்ளாகவோ உயிரிழப்பதாக புள்ளி விபரங்கள் உள்ளது. எதிர்பாராத விபத்துக்களினாலோ, உடல் நிலை பாதிப்புகளினாலோ ஒருவர் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக காத்திருக்கும் ஒவ்வொரு நிமிடமும் தங்க நிமிடங்களாகும். அவர்களுக்கான மருத்துவ சிகிச்சை கிடைப்பதற்கு முன்பாக மேற்கொள்ளப்படும் முதலுதவி என்பது தற்காலிக சிகிச்சையாகும். எந்தவிதமான கருவிகளோ உபகரணங்களோ இல்லாமல் உயிர் காக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்க முடியும்.அதற்கு சற்று மன தைரியமும், சமயோசித புத்தியும் அவசியமாகும்.

மேலும் ஒவ்வொருவருக்கும் முதலுதவி குறித்த அடிப்படை அறிவு இருந்தால் உயிர் காக்கும் அடிப்படை சிகிச்சையை அவர்களால் வழங்க முடியும். இன்றைய நிலையில் ஒருவர் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் நிலை ஏற்பட்டால் சுற்றி நின்று மொபைல் போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவ விடுவதில் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்.அதில் ஒரு துளி அளவு கூட அவர்களுக்கு முதலுதவி அளிப்பதிலோ மருத்துவ சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்வதிலோ காட்டுவதில்லை என்பது வேதனையான உண்மையாகும்.

முதலுதவிப் பெட்டி

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவப் போய் போலீசாரின் கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியதிருக்குமோ? கோர்ட்டு, வழக்கு, வாய்தா என்று அலைய வேண்டியதிருக்குமோ? என்ற தயக்கமும் இதற்கு ஒரு காரணமாகும். எனவே இதுபோன்ற தயக்கம் மற்றும் பயத்தை போக்கும் விதமாகவும், அனைவரும் அடிப்படை முதலுதவியை அறிந்து கொள்ளும் விதமாகவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.அதன்படி பள்ளி, கல்லூரிகளில் உயிர் காக்கும் முதலுதவி குறித்த கல்வி வழங்க வேண்டும். இது ஒவ்வொரு தனி நபரும் முதலுதவி குறித்து அறிந்து கொள்ள உதவுவதுடன் காலப்போக்கில் ஒட்டுமொத்த சமூகமும் முதலுதவி குறித்த அறிவைப் பெறுவதற்கு உதவிகரமாக இருக்கும்.

மேலும் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள், நீரில் மூழ்கியவர்கள், மின் விபத்தில் சிக்கியவர்கள், வாகன விபத்தில் சிக்கியவர்கள், வலிப்பு, இருதய நோய் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்பு என ஒவ்வொரு விதமான பாதிப்புகளுக்கும் ஒவ்வொரு விதமான முதலுதவி சிகிச்சைகள் தேவைப்படுகிறது.எனவே அதுகுறித்த அடிப்படை அறிவு இல்லாமல் மேற்கொள்ளப்படும் முதலுதவி சிகிச்சையே சில வேளைகளில் அவர்களின் உயிருக்கு எமனாகலாம்.எனவே அனைவரும் முறையான முதலுதவி சிகிச்சைகள் குறித்து அறிந்து கொள்வது கட்டாயமாக்கப்பட வேண்டும்.வாகனங்களில் உரிய முறையில் முதலுதவிப் பெட்டி வைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும்.

காத்திருப்பு

நமது கண் முன்னே ஒரு உயிர் போவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம் என்று அனைவரும் உறுதி மொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு உயிருக்குப் பின்னாலும் ஒரு குடும்பம் உள்ளது.அவருடைய வருகைக்காக இளம் மனைவியோ, பிஞ்சுக் குழந்தையோ, முதிய தாயோ காத்திருக்கக் கூடும்.நீங்கள் செய்யக் கூடிய முதலுதவி அவர்களுடைய உயிரைக் காப்பாற்ற உதவுமானால் அவருடைய குடும்பத்தினருக்கு நீங்கள் கடவுளாகத் தெரிவீர்கள்'என்று சமூக ஆர்வலர்கள் கூறினர்.

---


Next Story