மதுரை வழியாக இயக்கப்படும் நாகர்கோவில்-கச்சிகுடா ரெயிலில் முதல் வகுப்பு குளிரூட்டப்பட்ட பெட்டி இணைப்பு
மதுரை வழியாக இயக்கப்படும் நாகர்கோவில்-கச்சிகுடா ரெயிலில் முதல் வகுப்பு குளிரூட்டப்பட்ட பெட்டி இணைக்கப்பட்டுள்ளது.
தென்மத்திய ரெயில்வே சார்பில் பயணிகளின் வசதிக்காக, நாகர்கோவிலில் இருந்து மதுரை வழியாக ஆந்திரமாநிலம் கச்சிகுடா ரெயில் நிலையத்துக்கு வாராந்திர சிறப்புக்கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில், கச்சிகுடா ரெயில் நிலையத்தில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை), வருகிற 11-ந் தேதி, 18-ந் தேதி மற்றும் 25-ந் தேதிகளில் வெள்ளிக்கிழமை தோறும் நாகர்கோவிலுக்கு இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில், நாகர்கோவிலில் இருந்து வருகிற 6-ந் தேதி, 13,20 மற்றும் 27-ந் தேதிகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. அதன்படி, இந்த சிறப்புக்கட்டண சிறப்பு ரெயில் (வ.எண்.07435) கச்சிகுடாவில் இருந்து மேற்கண்ட நாட்களில் இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மாலை 6 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. இரவு 10.30 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையம் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண்.07436) நாகர்கோவிலில் இருந்து மேற்கண்ட நாட்களில் அதாவது சனிக்கிழமைகளில் நள்ளிரவு 12.30 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 4.15 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. திங்கட்கிழமைகளில் அதிகாலை 6.30 மணிக்கு கச்சிகுடா ரெயில் நிலையம் சென்றடைகிறது. இந்த ரெயிலில் 3 இரண்டடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 4 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 3 பொதுப்பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், தற்போது இந்த சிறப்புக்கட்டண சிறப்பு ரெயிலில் ஒரு 2-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிக்கு பதிலாக ஒரு முதல் வகுப்பு குளிரூட்டப்பட்ட பெட்டி தற்காலிகமாக இணைக்கப்பட்டுள்ளது. ரெயில், மல்காஜ்கிரி, நளகொண்டா, மிரியாள்குடா, நாடிகுடே, சாத்தனப்பள்ளி, குண்டூர், தெனாலி, பப்பட்லா, ஓங்கோல், நெல்லூர், கூடூர், ரேணிகுண்டா, காட்பாடி, வேலூர் கண்டோன்மெண்ட், திருவண்ணாமலை, விழுப்புரம், விருத்தாசலம், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.