முதல் தலைமுறையினர் மானியத்தில் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த முதல் தலைமுறையினர் மானியத்தில் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதிய தொழில்முனைவோர்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் படித்த சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ள முதல் தலைமுறை தொழில்முனைவோரின் தொடக்க முன்னெடுப்புகளை ஆதரித்து நெறிப்படுத்தி ஊக்குவிக்கும் நோக்கத்தில் தமிழ்நாடு அரசு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்களுக்கு திட்டத் தொகை ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை உள்ள தொழில் திட்டங்களுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி மாவட்ட தொழில் மையம் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசின் மானியமாக திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதமும் பட்டியல் வகுப்பு, பட்டியல் பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு திட்ட மதிப்பீட்டில் கூடுதலாக 10 சதவீதமும் என மொத்தம் 35 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. மானிய உச்ச வரம்பு ரூ.75 லட்சம் ஆகும்.
தகுதிகள்
மேலும் கடனை திரும்ப செலுத்தும் காலம் முழுமைக்கும் 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற குறைந்தபட்சம் பிளஸ்-2 தேர்ச்சி, பட்டம், பட்டயம், தொழில்பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 21 வயதுக்கு குறையாமல் இருக்க வேண்டும். வயது உச்ச வரம்பு பொதுப்பிரிவினருக்கு 35 ஆகவும், இடஒதுக்கீட்டு பிரிவினர் மற்றும் பெண்கள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கு 45 வயதாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தனி நபர் மட்டுமின்றி தகுதிபெற்ற ஒன்றுக்கும் மேற்பட்டோர் இணைந்து கூட்டாண்மை பங்குதாரர் அமைப்புகளுக்கு இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். முதலீட்டாளர் பங்கு பொது பிரிவினர் திட்ட தொகையில் 10 சதவீதமும், சிறப்பு பிரிவினர் 5 சதவீதமும் செலுத்த வேண்டும்.
சீராய்வின்போது...
இத்திட்டத்தின் கீழ் சேவை பிரிவில் மண் அள்ளும் எந்திரங்கள், கான்கிரீட் மிக்சர் வாகனம், ரிக் போரிங் வாகனம் போன்ற நகரும் வாகனங்களுக்கு மட்டுமே இதுவரை அனுமதி அளிக்கப்பட்டு வந்தது.திட்ட செயல்பாடு பற்றிய சீராய்வின் போது இத்திட்டத்தின் கீழ் பட்டியல் வகுப்பு மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தோர் பெருமளவு பயன்பெறுவதை உறுதி செய்யும் வகையில் மேற்குறித்த பிரிவுகளை சார்ந்த பயனாளிகள், பயனியர் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கான அனைத்து வகை வணிக வாகனங்களையும் வாங்கி வாடகைக்கு விடுவதற்கான தொழில் திட்டங்களை அனுமதிக்க வேண்டியதன் தேவை உணரப்பட்டு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு...
எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த தகுதி பெற்ற பட்டியல் வகுப்பு மற்றும் பழங்குடியினர் டாக்சி, டூரிஸ்ட் வாகனங்கள், ஆம்புலன்ஸ், பஸ், மினிபஸ், லாரி, டிராக்டர், ட்ரெய்லர் போன்றவற்றை வாங்கி இத்திட்டத்தின் கீழ் 35 சதவீதம் தனிநபர் மானியமும் கடனை திரும்ப செலுத்தும் காலம் முழுமைக்கும் 3 சதவீதம் வட்டி மானியமும் பெற்று பயன்பெறலாம்.
மேலும் இதுகுறித்து விவரங்கள் மற்றும் ஆலோசனைகளை மாவட்ட தொழில் மையம் அலுவலகம், நெ-95/2 ஏ, ராஜா நகர், கள்ளக்குறிச்சி என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது 04151-294057 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.