முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நாகை செல்கிறார்


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நாகை செல்கிறார்
x

நாகைக்கு இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிறார். டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணியை நாளை அவர் ஆய்வு செய்கிறார்.

தஞ்சாவூர்,

காவிரிடெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் குறுவை சாகுபடி சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதற்காக ஆறுகள், வடிகால்கள், வாய்க்கால்கள் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. இந்த பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்தநிலையில் தூர்வாரும் பணியை ஆய்வு செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று (திங்கட்கிழமை) திருச்சி செல்கிறார்.

நாளை ஆய்வு

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கார் மூலம் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு செல்கிறார். வேளாங்கண்ணியில் மு.க.ஸ்டாலின் இரவு தங்குகிறார். நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்படும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாகை மாவட்டம் கருவேலங்கடையில் உள்ள கல்லாறு வடிகால் தூர்வாரும் பணியை ஆய்வு செய்கிறார். பின்னர் அவர், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் வாய்க்கால் தூர்வாரும் பணியை ஆய்வு செய்கிறார். தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் காட்டூரில் மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி அருங்காட்சியகம் அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மாலை 4 மணிக்கு தஞ்சை மாவட்டத்துக்கு செல்லும் அவர், அம்மாப்பேட்டை அருகே கொக்கேரி கிராமத்தில் பிமனோடி வாய்க்கால் தூர்வாரும் பணியை ஆய்வு மேற்கொள்கிறார்.

போலீஸ் பாதுகாப்பு

அதன்பின்னர் அங்கிருந்து புறப்படும் முதல்- அமைச்சா் மு.க.ஸ்டாலின் மாலை 6 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை சென்றடைகிறார். அங்கு செய்தியாளர்களை சந்திக்கும் அவர், பின்னர் விமானம் மூலம் சென்னை வருகிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


Next Story