தென்காசிக்கு 8-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை: 25 ஆயிரம் பேர் அமரும் வகையில் பந்தல் அமைக்க ஏற்பாடு


தென்காசிக்கு 8-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை: 25 ஆயிரம் பேர் அமரும் வகையில் பந்தல் அமைக்க ஏற்பாடு
x
தினத்தந்தி 1 Dec 2022 12:15 AM IST (Updated: 1 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் 8-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சியில் 25 ஆயிரம் பேர் அமரும் வகையில் பந்தல் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் தெரிவித்தார்.

தென்காசி

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 8-ந்தேதி தென்காசியில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக வருகிறார். அவர் சென்னையில் இருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ெரயிலில் தென்காசி வருகிறார். அவர் வரும் பாதையை ஆய்வு செய்வதற்காக தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் நேற்று காலை 7 மணிக்கு தென்காசி ெரயில் நிலையம் வந்தார். முதல்-அமைச்சர் வரும் பாதையை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக தென்காசி வருகிறார். இதற்காக தென்காசி அருகே உள்ள கணக்கப்பிள்ளை வலசை வேல்ஸ் வித்யாலயா பள்ளி மைதானத்தில் பிரம்மாண்டமான பந்தல் அமைக்கப்படுகிறது. முதலில் 600 அடி நீளம், 240 அடி அகலத்தில் பந்தல் அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பந்தலின் அளவை அதிகரித்து 600 அடி நீளம் 320 அடி அகலத்தில் அமைக்கப்படுகிறது. மொத்தம் இதன் பரப்பளவு 1.92 லட்சம் சதுர அடியாகும். இந்த பந்தல் 25 ஆயிரம் பயனாளிகள் அமரும் அளவிற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. பொதிகை எக்ஸ்பிரஸ் ெரயிலில் அவர் வருவதற்காக தனி பெட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 17 இடங்களில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ஷெரீப், மாவட்ட அவைத் தலைவர் சுந்தர மகாலிங்கம், செங்கோட்டை நகரச் செயலாளர் வெங்கடேசன், முன்னாள் செயலாளர் ரஹீம், முன்னாள் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ஷமீம் இப்ராகிம், முன்னாள் நகர்மன்ற தலைவர் கோமதிநாயகம், மாவட்ட பிரதிநிதி ரகுமத்துல்லா, வடகரை பேரூராட்சி தலைவர் ஷேக் தாவூது உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story