பணியின் போது உயிரிழந்த ஒப்பந்த தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் முதல்-அமைச்சர் உத்தரவு
சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய பணி மேற்கொள்ளும் போது உயிரிழந்த ஒப்பந்த தொழிலாளரின் குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சம் நிவாரண தொகை வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஜெட் ராடிங் மற்றும் சூப்பர் சக்கர் எந்திரத்தைப் பயன்படுத்தி மாதவரம் முத்துமாரியம்மன் கோவில் தெருவில் கழிவுநீர் அடைப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது, ஒப்பந்தத் தொழிலாளி நெல்சன் என்கிற கட்டாரி (வயது 26), எந்திர துளையில் ஏதேனும் கல், துணி அடைக்கப்பட்டிருக்கிறதா? என்று சாலையில் நின்று கவனித்த போது, எதிர்பாராத விதமாக தவறி விழுந்து விட்டார்.
அவரை காப்பாற்ற முயன்ற ஒப்பந்த தொழிலாளி ரவி (35), அவரும் எந்திர துளையில் விழுந்து விட்டார். உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருவரும் உயிருடன் மீட்கப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ரூ.15 லட்சம்
இதில் ஒப்பந்தத் தொழிலாளி, நெல்சன் என்கிற கட்டாரி என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். மேலும் மற்றொரு தொழிலாளி ரவிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயிரிழந்த தொழிலாளி நெல்சன் என்கிற கட்டாரியின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக ரூ.15 லட்சம் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.