ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரசு குழந்தைகள் இல்லத்தில் முதல்-அமைச்சர் திடீர் ஆய்வு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரசு குழந்தைகள் இல்லத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணியில் இல்லாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிரடி உத்தரவிட்டார்.
சென்னை,
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் சென்றுக் கொண்டிருந்தார். காரைக்கூட்ரோடு வழியாக சென்றபோது காரை திடீரென்று நிறுத்த சொன்னார்.
பின்னர் அவர் காரில் இருந்து இறங்கி அப்பகுதியில் உள்ள சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்துக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். வகுப்பறைகளுக்கு சென்று பாடம் எவ்வாறு நடத்தப்படுகிறது? இங்கு வழங்கப்படும் உணவின் தரம் எவ்வாறு இருக்கிறது? என்று மாணவர்களிடம் அக்கறையாக விசாரித்தார். ஆசிரியர்களிடம், மாணவர்களுக்கு சிறந்த முறையில் கல்வி கற்பிக்க வேண்டும். அவர்கள் உயர்கல்வி கற்க ஊக்குவிக்க வேண்டும். அவர்களது எதிர்கால நல்வாழ்வுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதிரடி உத்தரவு
இந்த இல்லத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் விபரங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். அப்போது சில ஆசிரியர்கள், அலுவலர் பணியில் இல்லாதது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, ஆர்.காந்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.