ஒரே சமயத்தில் 10 சிலைகளை வெளிநாட்டில் இருந்து மீட்பது இதுவே முதல் முறை- கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம்


ஒரே சமயத்தில் 10 சிலைகளை வெளிநாட்டில் இருந்து மீட்பது இதுவே முதல் முறை- கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம்
x

கடந்த 40 ஆண்டுகால வரலாற்றில் ஒரே சமயத்தில் 10 சிலைகளை வெளிநாட்டில் இருந்து மீட்பது இதுவே முதல் முறை என கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் கூறினார்.

தஞ்சாவூர்

கும்பகோணம்:-

கடந்த 40 ஆண்டுகால வரலாற்றில் ஒரே சமயத்தில் 10 சிலைகளை வெளிநாட்டில் இருந்து மீட்பது இதுவே முதல் முறை என கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் கூறினார்.

சிலைகள் மீட்பு

இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு கடத்தி கொண்டு செல்லப்பட்ட பழமையான சாமி சிலைகளை மீட்டு மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வர தொல்பொருள் ஆய்வாளர்களும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் முயற்சி மேற்கொண்டு வந்தனர். அதன்படி இந்தியாவில் இருந்து கடத்தி கொண்டு செல்லப்பட்ட பழமை வாய்ந்த 10 சாமி சிலைகள் வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியா கொண்டு வரப்பட்டன.

இந்த நிலையில் பல்வேறு நாடுகளில் இருந்து மீட்கப்பட்ட கங்காள மூர்த்தி, ஞானசம்பந்தர், விஷ்ணு என்கிற வரதராஜபெருமாள், சிவன்-பார்வதி, நந்திகேஸ்வரர், ஸ்ரீதேவி, நடராஜர் உள்ளிட்ட உலோக சாமி சிலைகளும், 2 துவார பாலகர்கள் உள்ளிட்ட 10 சாமி சிலைகள் நேற்று கும்பகோணம் கொண்டு வரப்பட்டன.

இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் கும்பகோணத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பல கோடி ரூபாய் மதிப்பு

தற்போது மீட்டு கொண்டு வரப்பட்டுள்ள சிலைகள் அனைத்தும் மிகவும் தொன்மை வாய்ந்தது. பல கோடி ரூபாய் மதிப்பு உடையது. இந்த சிலைகளை மதிப்பீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. சிலைகள் அனைத்தும் வருகிற திங்கட்கிழமை கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட உள்ளன.

உள்நாட்டில் இருக்கும் சிலைகளை மீட்டு கொண்டு வருவது சுலபம். ஆனால் வெளிநாடுகளில் இருந்து சிலைகளை மீட்டு கொண்டு வருவது அவ்வளவு சுலபம் கிடையாது. அந்தந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு உரியமுறையில் அந்தந்த நாட்டு அரசிடம் பேசி, அங்கு இருப்பது இந்திய சிலைகள் என்பதை உரிய ஆதார ஆவணங்களை கொண்டு நிரூபித்த பின்னரே வெளிநாடுகளில் இருந்து சிலைகளை மீட்டுக் கொண்டு வர முடியும்.

ஒரே சமயத்தில் 10 சிலைகள்

கடந்த 40 ஆண்டுகால வரலாற்றில் ஒரே சமயத்தில் 10 சிலைகள் வெளிநாடுகளில் இருந்து மீட்டு கொண்டு வந்தது இதுவே முதல் முறையாகும். இதற்காக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் குழுவினர் கடுமையாக உழைத்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக் நடராஜன், துணை போலீஸ் சூப்பிரண்டு கதிரவன், இன்ஸ்பெக்டர்கள் ரவீந்திரன், இளங்கோவன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.


Next Story