இந்திய ராணுவத்தில் பதவியேற்பு: தமிழக முதல் பெண் மேஜர் ஜெனரல்


இந்திய ராணுவத்தில் பதவியேற்பு: தமிழக முதல் பெண் மேஜர் ஜெனரல்
x

ராணுவ செவிலியர் சேவை பிரிவில் தமிழகத்தில் இருந்து முதல் பெண் மேஜர் ஜெனரலாக பதவியேற்றவர் இக்னேசியஸ் டெலோஸ் புளோரா ஆவார். அவர் இந்த பதவிக்கு வந்தது மிகவும் பெருமையாக இருப்பதாக சகோதரர்கள் தெரிவித்துள்ளனர்.

முதல் பெண் மேஜர் ஜெனரல்

இந்திய ராணுவ செவிலியர் சேவையில் தமிழகத்தில் இருந்து முதல் பெண் மேஜர் ஜெனரலாக இக்னேசியஸ் டெலோஸ் புளோரா பதவி உயர்வு பெற்றுள்ளார். இவருக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பதவி உயர்வு பெற்றுள்ள இக்னேசியஸ் டெலோஸ் புளோராவின் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் ராஜாவூர் வடக்கூர் ஆகும். இவருடைய தந்தை லூர்துசாமி பிள்ளை, தாய் தெரசம்மாள். இவர் கடந்த 5-1-1965-ம் ஆண்டு பிறந்தார்.

இவருக்கு 3 சகோதரர்கள் மற்றும் 2 சகோதரிகள் உண்டு. மூத்த சகோதரரான அந்தோணி சாமி 40 ஆண்டுகள் இந்திய விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 2-வது சகோதரரான ஜாண் பிரிட்டோ எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 3-வது சகோதரர் ஜார்ஜ் ராஜாவும் ராணுவத்தில் பணியாற்றியவர். ஆனால் இவர் தற்போது உயிரோடு இல்லை. அன்னம்மாள், டெசி ஆகிய 2 சகோதரிகள் உள்ளனர்.

ஆரம்ப கல்வி

இக்னேசியஸ் டெலோஸ் புளோராவின் ஆரம்பக்கல்வி 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ராஜாவூர் புனித மிக்கேல் தொடக்கப்பள்ளியிலும், 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை தோப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பை நாகர்கோவில் லிட்டில் பிளவர் பள்ளியிலும் படித்தார்.

பின்னர் பள்ளி படிப்பை முடித்தவுடன் மூத்த சகோதரரான அந்தோணி சாமியின் அறிவுரைப்படி திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்திய ராணுவ செவிலியர் சேவை பிரிவு பணிக்கான எழுத்து தேர்வை எழுதி அதில் தேர்வானார். பின்னர் அடுத்தடுத்து தேர்வுகள் எழுதி பதவி உயர்வு பெற்று வந்தார். இந்த நிலையில் செவிலியர் பிரிவில் முதன்மை இடமான மேஜர் ஜெனரல் பதவி உயர்வை பெற்றுள்ளார். இதனை அவரது குடும்பத்தினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

நாட்டுக்கு சேவையாற்றிய குடும்பம்

இதுபற்றி இக்னேசியஸ் டெலோஸ் புளோராவின் சகோதரர்கள் அந்தோணி சாமி, ஜான் பிரிட்டோ ஆகியோர் கூறியதாவது:-

இந்திய நாட்டிற்காக நாங்கள் பணியாற்றியதை நினைத்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். அதிலும் எங்களது சகோதரி இக்னேசியஸ் டெலோஸ் புளோரா தமிழகத்தின் முதல் பெண் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றிருப்பது மிகவும் பெருமையாக உள்ளது. நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் சேவை செய்யும் பாக்கியம் எங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு கிடைத்தது மிகவும் சந்தோசமாகவும், மன நிறைவாகவும் உள்ளது. இக்னேசியஸ் டெலோஸ் புளோரா சிறுவயதில் இருந்தே உதவும் மனப்பான்மை உடையவள். படிக்கும் காலத்தில் விளையாட்டிலும் சரி, கல்வியிலும் சரி சிறந்து விளங்கினார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இக்னேசியஸ் டெலோஸ் புளோராவின் கணவர் இக்னேசியஸ் ஜான். இவர் ஓய்வு பெற்ற பேராசிரியர். இவர்களுக்கு மைக்கேல் ஜெகன், ஜெசன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story