பாலக்கோடு மார்க்கெட்டில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த அழுகிய மீன்கள் பறிமுதல்


பாலக்கோடு மார்க்கெட்டில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த அழுகிய மீன்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 15 Feb 2023 12:15 AM IST (Updated: 15 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாலக்கோடு:

பாலக்கோடு மார்க்கெட்டில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த அழுகிய மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்பட்டன.

தொடர் புகார்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மீன் மார்க்கெட்டில் 15-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. ஒகேனக்கல், மேட்டூர் மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து வாங்கி வரப்படும் மீன்கள் இந்த மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் பாலக்கோடு, காரிமங்கலம் பகுதிகளில் பண்ணைக்குட்டைகளில் வளர்க்கப்படும் பல்வேறு வகையான மீன்களும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தநிலையில் இந்த மீன் மார்க்கெட்டில் தரமற்ற மீன்கள் விற்கப்படுவதாகவும், இதனால் தோல் வியாதி, அரிப்பு, வாந்தி, வயிற்று பிரச்சினை உள்ளிட்ட உடல் நலக்கோளாறுகள் ஏற்படுவதாகவும், மாவட்ட நிர்வாகத்துக்கு தொடர்ச்சியாக புகார்கள் சென்றன. அதன்பேரில் புகார்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

50 கிலோ மீன்கள் பறிமுதல்

இதையடுத்து மீன்வளத்துறை உதவி இயக்குனர் கோகுல ரமணன், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் பானு சுஜாதா மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மீன் மார்க்கெட்டில் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது அழுகிய மற்றும் தரமற்ற மீன்கள், தடை செய்யப்பட்ட மீன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சுமார் 50 கிலோ எடையுள்ள ரோகு, ஜிலேபி, பாம்லெட், மெருகால் உள்ளிட்ட அழுகிய மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவற்றை அதிகாரிகள் பினாயில் ஊற்றி அழித்தனர். மேலும் அழுகிய, தரமற்ற, தடை செய்யப்பட்ட மீன்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். ஆய்வின்போது உணவு பாதுகாப்பு ஒன்றிய அலுவலர் நந்தகோபால், மீன்வள ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story