புகையிலைப்பட்டியில் குளத்தில் போட்டிப்போட்டு மீன்பிடித்த கிராம மக்கள்


புகையிலைப்பட்டியில் குளத்தில் போட்டிப்போட்டு மீன்பிடித்த கிராம மக்கள்
x
தினத்தந்தி 17 July 2023 2:30 AM IST (Updated: 17 July 2023 2:31 AM IST)
t-max-icont-min-icon

புகையிலைப்பட்டியில் குளத்தில் போட்டிப்போட்டு கிராம மக்கள் மீன்பிடித்தனர்.

திண்டுக்கல்

சாணார்பட்டி அருகே புகையிலைப்பட்டியில் வலையெடுப்பான் குளம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை போதிய மழை பெய்யாததால் குளம் நிரம்பவில்லை. கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்ததால் வலையெடுப்பான் குளத்துக்கு நீர்வரத்து அதிகரித்து, குளம் நிரம்பியது. இதையடுத்து கிராம மக்கள் மீன் குஞ்சுகளை வாங்கி குளத்தில் விட்டனர். மீன்கள் நன்கு வளர்ந்த நிலையில், குளத்திலும் தண்ணீர் வற்ற தொடங்கியது. இதைத்தொடர்ந்து குளத்தில் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, புகையிலைப்பட்டி வலையெடுப்பான் குளத்தில் நேற்று மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை முதலே கிராம மக்கள் ஏராளமானோர் குளத்து கரையில் குவிந்தனர். அப்போது குளத்தின் கரையில் உள்ள தொந்தியம்மன் கோவிலில் மீன்பிடி திருவிழாவுக்காக சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதன்பிறகு கிராம முக்கியஸ்தர்கள் கொடி அசைக்க, வில்லில் இருந்து பாய்ந்த அம்பு போன்று கிராம மக்கள், இளைஞர்கள் என ஏராளமானோர் குளத்துக்குள் சீறிப்பாய்ந்து, மீன்களை போட்டிப்போட்டு பிடித்தனர். அப்போது அவர்கள் தாங்கள் கொண்டு வந்த கூடை, வலை, ஊத்தா உள்ளிட்டவற்றை பயன்படுத்தி அங்கும், இங்குமாக துள்ளிக்குதித்த மீன்களையும், குளத்திற்குள் சகதிக்குள் பதுங்கிய விரால் உள்ளிட்ட மீன்களையும் லாவகமாக பிடித்தனர். அதேபோல் ஜிலேபி, கெண்டை, பாறை, கட்லா உள்ளிட்ட மீன்களும் பிடிபட்டன.

பின்னர் குளத்தில் பிடித்த மீன்களை கிராம மக்கள் தங்களது வீடுகளுக்கு கொண்டு சென்று சமைத்தனர். பின்னர் சமைத்த மீன் வகைகளை உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்கியும், தாங்களும் சாப்பிட்டு மகிழ்ந்தனர். இதனால் புகையிலைப்பட்டி கிராமத்தில் மீன்குழம்பு வாசனை கமகமத்தது.


Related Tags :
Next Story