கடலூர் துறைமுகத்திற்கு மீன் வரத்து குறைந்தது
கடல் நீரோட்டத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் கடலூர் துறைமுகத்திற்கு மீன் வரத்து குறைந்துள்ளது. இதனால் மீன்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
கடலூர் முதுநகர்,
கடலூர் துறைமுகத்தில் இருந்து தினந்தோறும் அக்கரைகோரி, தேவனாம்பட்டினம், சிங்காரத்தோப்பு, சொத்திக்குப்பம், சோனங்குப்பம், ராசாபேட்டை, சித்திரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள், ஆயிரத்துக்கும் அதிகமான பைபர் மற்றும் விசைப்படகுகளில் மீன் பிடிக்க கடலுக்கு செல்வது வழக்கம். இதனால் கடலூர் மீன்பிடி துறைமுகம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கடல் நீரோட்டத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் வலையில் மீன்கள் அதிக அளவில் சிக்கவில்லை.
இதன் காரணமாக மீனவர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்து வருவதோடு, அவர்களுக்கு நஷ்டமும் ஏற்பட்டு வருகிறது. இதனால் மீனவர்கள் தற்போது மீன்பிடிக்க ஆர்வம் காட்டவில்லை. இதன் காரணமாக குறைந்த அளவில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்று வருகின்றனர்.
மீன்கள் விலை உயர்வு
இதனால் கடலூர் துறைமுகத்துக்கு மீன்வரத்து குறைந்து காணப்படுகிறது. வழக்கமாக 100 டன் அளவிற்கு மீன்கள் வரத்து இருக்கும். ஆனால் தற்போது 3 டன் அளவுக்கு மட்டுமே மீன்வரத்து இருப்பதாக மீனவர் ஒருவர் தெரிவித்தார். மீன்கள் வரத்து குறைந்ததால் மீன்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. அதன்படி ஒரு கிலோ ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வஞ்சர மீன் தற்போது ரூ.750 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்ட சங்கரா மீன், ரூ.450-க்கும், ரூ.400-க்கு விற்கப்பட்ட பன்னி சாத்தான் ரூ.550-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வெறிச்சோடிய துறைமுகம்
இருப்பினும் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அவர்கள் மீன்களை போட்டி போட்டு வாங்கிச்சென்றனர். மீன்கள் கிடைக்காமல் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதையும் காணமுடிந்தது. மீன்கள் வரத்து குறைவால் வழக்கமாக பரபரப்பாக காணப்படும் கடலூர் துறைமுகம் நேற்று ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.