மீன்பிடி தடைக்காலம் எதிரொலி:கடலூர் துறைமுகத்தில் மீன்களின் விலை கிடுகிடு உயர்வுஒரு கிலோ வஞ்சிரம் ரூ.1200-க்கு விற்பனை


மீன்பிடி தடைக்காலம் எதிரொலி:கடலூர் துறைமுகத்தில் மீன்களின் விலை கிடுகிடு உயர்வுஒரு கிலோ வஞ்சிரம் ரூ.1200-க்கு விற்பனை
x
தினத்தந்தி 17 April 2023 12:15 AM IST (Updated: 17 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மீன்பிடி தடைக்காலம் எதிரொலியாக கடலூர் துறைமுகத்தில் மீன்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து காணப்பட்டது. ஒரு கிலோ வஞ்சிரம் ரூ.1200-க்கு விற்பனையானது.

கடலூர்

கடலூர் முதுநகர்,

மீன்பிடி தடைக்காலம் அமல்

கடலூர் துறைமுகத்தில் இருந்து தேவனாம்பட்டினம், சிங்காரத்தோப்பு, சோனங்குப்பம், அக்கரைகோரி, ராசாபேட்டை, சித்திரைப்பேட்டை, சொத்திக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படகுகளில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவார்கள். அவ்வாறு பிடித்து வரப்படும் மீன்களை, வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கி செல்வார்கள். சராசரியாக நாள் ஒன்றுக்கு 100 டன் அளவிற்கு மீன் வரத்து இருக்கும். இதனிடையே ஒவ்வொரு ஆண்டும் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 61 நாட்கள் மீன் பிடிப்பதற்கு தடை விதிக்கப்படும்.

அந்த வகையில், நடப்பாண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் தற்போது அமலில் இருந்து வருகிறது. இதனால் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை. இருப்பினும் நாட்டுமர படகு மற்றும் பைபர் படகுகள் 5 நாட்டிங்கல் தூரம் சென்று மீன்பிடிக்க அனுமதிக்கப்படுகிறது.

வஞ்சிரம் ரூ.1200-க்கு விற்பனை

இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால் வழக்கம்போல் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடலூர் துறைமுகத்திற்கு மீன் வாங்க திரண்டு வந்ததால் கூட்டம் அலைமோதியது. மீன்பிடி தடைக்காலம் என்பதால் மீன்களின் வரத்து மிகவும் குறைந்து இருந்தது. இதனால் மீன்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து காணப்பட்டது. விலை உயர்வு குறித்து மீனவர் ஒருவர் கூறுகையில், தற்போது மீன்பிடி தடைக்காலம் என்பதால் மீன்களின் வரத்து குறைந்து காணப்படுகிறது. கடந்த 2 வாரங்களாக ரூ.700 முதல் ரூ.800 வரை விற்ற ஒரு கிலோ வஞ்சிரம் மீன் நேற்று கிலோ ரூ.1200-க்கும், ஒரு கிலோ ரூ.300-க்கு விற்ற சங்கரா, சிலா வகை மீன்கள் கிலோ ரூ.500-க்கும், ரூ.200-க்கு விற்ற கனவா மீன் ரூ.300-க்கும் விற்பனையானது என்றார். இருப்பினும் அசைவ பிரியர்கள் மற்றும் வியாபாரிகள் மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றதையும் காண முடிந்தது.


Next Story