வேதாரண்யத்தில் மீன்கள் விலை இருமடங்கு உயர்வு
வேதாரண்யம் பகுதியில் மீன்கள் விலை இருமடங்கு உயர்ந்துள்ளது.
வேதாரண்யம் பகுதியில் மீன்கள் விலை இருமடங்கு உயர்ந்துள்ளது.
மீன்பிடிக்க செல்லவில்லை
நாகை மாவட்டம் வேதாரண்யம் கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக கடந்த 5 நாட்களாக பைபர் படகு, விசைப்படகு மூலமாக மீன்பிடிக்கும் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. வேதாரண்யம் அருகே உள்ள ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வானவன்மகாதேவி, கோடியக்கரை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் இருந்து நாள்தோறும் குறைந்த எண்ணிக்கையிலான பைபர் படகுகளில் மீனவர்கள் 5 நாட்டிகல் தொலைவு வரை சென்று மீன்பிடித்து வருகின்றனர்.
இவர்கள் நள்ளிரவில் மீன்பிடிக்க சென்று காலையில் கரைக்கு வந்து விடுகிறார்கள். மீனவர்களின் வலையில் வாவல், காலா, பண்ணா, கானாங்கெளுத்தி, மத்தி உள்ளிட்ட மீன்களும், நண்டு, இறால்களும் குறைந்த அளவில் பிடிபடுகின்றன.
விலை உயர்வு
மீன்பிடிக்க பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்லாத நிலையில், பைபர் படகுகள் மூலம் குறைந்த தூரம் வரை சென்று பிடிக்கப்பட்டு வரும் மீன்கள் நல்ல விலைக்கு விற்பனையாகின்றன. முன்பை விட மீன்களின் விலை இரு மடங்காக உயர்ந்திருப்பதாக மீன் பிரியர்கள் கூறுகிறார்கள்.
முன்பு கிலோ ரூ.600-க்கு விற்பனையான வாவல் தற்போது கிலோ ரூ.1,250 வரை விற்பனையாகிறது. அதேபோல ரூ.400-க்கு விற்ற காலா மீன் ரூ.800-க்கும், ரூ.200-க்கு விற்பனையான இறால் ரூ.400-க்கும் விற்பனையாகிறது. தற்போது அனைத்து வகை மீன்களும் ரூ.100 முதல் ரூ.200 வரை விலை உயர்ந்துள்ளது
நாட்டு மீன்கள்
குறைந்த அளவு மீன்கள் கிடைத்ததாலும், நல்ல விலை கிடைப்பதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேவேளையில் மீன் விலை உயர்வால் மீன் பிரியர்கள் குறைந்த அளவே மீன்களை வாங்கிச் செல்கின்றனர்.
மீன்கள் அதிகம் வராததால் கோழி, ஆட்டுக்கறி விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடல் மீன்கள் விலை எகிறி உள்ளதால் நாட்டு மீன்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது.