கடலூர் துறைமுகத்தில் மீன்கள் விலை கிடுகிடு உயர்வு: வஞ்சிரம் ரூ.1,000, வவ்வா ரூ.700-க்கு விற்பனை


கடலூர் துறைமுகத்தில் மீன்கள் விலை கிடுகிடு உயர்வு: வஞ்சிரம் ரூ.1,000, வவ்வா ரூ.700-க்கு விற்பனை
x
தினத்தந்தி 3 July 2023 12:15 AM IST (Updated: 3 July 2023 11:30 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் துறைமுகத்தில் மீன்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வஞ்சிரம் ரூ.1000, வவ்வா ரூ.700-க்கும் விற்பனையானது.

கடலூர்

கடலூர் முதுநகர்,

துறைமுகம்

கடலூர் துறைமுகத்தில் இருந்து தினந்தோறும் ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் விசைப்படகுகள் மற்றும் பைபர் படகுகளில் ஆழ்கடலுக்கு சென்று மீன்களை பிடித்து வந்து விற்பனைக்காக குவித்து வைப்பார்கள். அதனை மொத்த, சில்லறை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வாங்கிச் செல்வது வழக்கம். குறிப்பாக வார விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் அதிகாலை முதல் ஏராளமான அசைவ பிரியர்கள் மற்றும் வியாபாரிகள் குவிந்து, மீனவர்கள் பிடித்து வரும் மீன்களை வாங்கிச் செல்வார்கள்.

விடுமுறை தினம்

அந்த வகையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை தினம் என்பதால், கடலூர் துறைமுகத்துக்கு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் மீன்களை வாங்க அதிகாலை முதலே வரத்தொடங்கினர். அப்போது ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க விசைப்படகுகளில் சென்ற ஒரு சில மீனவர்கள் மட்டும் கடலூர் துறைமுகத்திற்கு திரும்பினார்கள். ஆனால் மீனவர்கள் வலைகளில் எதிர்பார்த்த மீன்கள் சிக்கவில்லை. கிளிச்சல் வகை மீன்கள் மட்டுமே அதிக அளவில் சிக்கின.

மீன்கள் வரத்து குறைவு

இதுகுறித்து மீனவர் ஒருவர் கூறுகையில், நீரோட்டம் காரணமாக துறைமுகத்துக்கு மீன்வரத்து மிகவும் குறைந்து காணப்பட்டது. 50 டன் எடையிலான கிளிச்சல் மீன்கள் சிக்கியது. மீன் எண்ணெய் தயாரிக்க பயன்படுத்தப்படும் இந்த மீன்களை கேரள வியாபாரிகள் கிலோ ரூ.30-க்கு போட்டி போட்டு வாங்கிச் சென்றனர்.

ஆனால் மற்ற வகை மீன்களான வஞ்சரம், வவ்வா, சங்கரா, கவளை, கானாங்கத்தை, இறால், நண்டு, மிக மிக குறைந்த அளவில் வரத்து இருந்தது. இதனால் துறைமுகத்தில் மீன்களின் விலை சற்றே அதிகரித்து காணப்பட்டது.

விலை உயர்வு

ஒரு கிலோ ரூ.700-க்கு விற்ற வஞ்சரம் மீன் ரூ.1000-க்கு விலை போனது. ரூ.300-க்கு விற்ற வவ்வா மீன் ரூ.700-க்கும், ரூ.100-க்கு விற்ற கானாங்கத்தை ரூ.200-க்கும் விற்பனையானது.

அதேபோல் ரூ.200-க்கு விற்ற சங்கரா வகை மீன்கள் ரூ.350 முதல் ரூ.400 வரை விலை போனது. ரூ.200-க்கு விற்ற நண்டு ரூ.350-க்கும், ரூ.50-க்கு விற்ற கவளை மீன் ரூ.100-க்கும், ரூ.150-க்கு விற்ற கனவா மீன் ரூ.250-க்கு விலை போனது. இருப்பினும் பொதுமக்கள் மீன்களை போட்டி போட்டு வாங்கிச் சென்றதை பார்க்க முடிந்தது என்றார்.


Next Story