மீன் வளர்த்து பயனடைய மானிய திட்டங்கள்
பிரதமர் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மீன் வளர்ப்பு செய்து பயனடையலாம் என்று கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மீன்வளர்க்க மானியம்
பிரதமர் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல்நோக்கு பண்ணைக்குட்டையில் மீன் வளர்ப்பினை ஊக்குவித்திட உள்ளீட்டு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 250 ச.மீ. முதல் 1000 ச.மீ. வரையிலான பண்ணைக்குட்டையில் மீன்குஞ்சு இருப்பு செய்து மீன் தீவனம் உள்ளீட்டு செலவினம் மேற்கொள்ள ஒரு அலகிற்கு ரூ.36 ஆயிரம் மற்றும் செலவினத்திற்கு 50 சதவீத மானியத்தொகை ரூ.18 ஆயிரம் வழங்கப்படும்.
ரூ.3 லட்சத்தில் புறக்கடையில் அலங்கார மீன் வளர்ப்பு அலகுகள் அமைக்க பொது பிரிவிற்கு 40 சதவீத மானியமாக அதிகபட்சம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரமும், பெண்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 60 சதவீத மானியமாக அதிகபட்சம் ரூ.1 லட்சத்து 80 ஆயிரமும், ரூ.8 லட்சத்தில் நடுத்தர அளவிலான அலங்கார மீன் வளர்ப்பு அலகுகள் அமைக்க பொது பிரிவிற்கு 40 சதவீத மானியமாக அதிக பட்சம் ரூ.3 லட்சத்து 20 ஆயிரமும், பெண்களுக்கு 60 சதவீத மானியமாக அதிகபட்சம் ரூ.4 லட்சத்து 80 ஆயிரமும் வழங்கப்படும்.
உயிர்மீன் விற்பனை மையங்கள்
மேலும் ரூ.20 லட்சத்தில் உயிர்மீன் விற்பனை மையங்கள் அமைக்க 40 சதவீத மானியம் அதிகபட்சம் ரூ.8 லட்சம் வழங்கவும், ரூ.20லட்சத்தில் குளிர்காப்பிடப்பட்ட வாகனங்கள் வழங்கிட பொதுபிரிவிற்கு 40 சதவீத மானியமாக அதிகபட்சம் ரூ.8 லட்சமும், ரூ.10 லட்சத்தில் அலங்கார மீன்களின் மீன்விற்பனையக கட்டுமானத்திற்கு அதிகபட்சமாக பொது பிரிவிற்கு ரூ.4 லட்சமும்,1 ஹெக்டேர் பரப்பளவில் புதியமீன்குஞ்சு, வளர்ப்பு அலகு அமைக்க பொதுபிரிவிற்கு 40 சதவீத மானியமாக அதிகபட்சம் ரூ.2 லட்சத்து 80 ஆயிரமும், பெண்களுக்கு 60 சதவீத மானியமாக அதிகபட்சம் ரூ.4லட்சத்து 20ஆயிரமும் வழங்கப்படும்.
பயோபிளாக் குளங்கள்
இதேபோல்1 ஹெக்டேரில்புதிய மீன்வளர்ப்பு அலகு அமைத்து உள்ளிட்ட மானியம் வழங்கும் திட்டத்தில் பொதுபிரிவிற்கு 40 சதவீத மானியமாக அதிகபட்சம் ரூ.4 லட்சத்து40 ஆயிரமும், பெண்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 60 சதவீத மானியமாக அதிகபட்சம் ரூ.6லட்சத்து 60 ஆயிரமும், சிறிய அளவிலான பயோபிளாக் குளங்கள் 1 அலகு அமைக்க பொதுபிரிவிற்கு 40 சதவீத மானியமாக அதிகபட்சம் ரூ.3 லட்சமும், பெண்களுக்கு 60 சதவீத மானியமாக அதிகபட்சம் ரூ.4½ லட்சம் வழங்கப்பட உள்ளது. இந்த மீன்வளர்ப்பு திட்டங்களில் ஏதேனும் ஒன்றில் விவசாயிகள் மீன்வளர்ப்பு செய்து பயன்பெறலாம்.
எனவே விருப்பமுள்ளவர்கள் தாராபுரத்தில் இயங்கி வரும் மீன்வள ஆய்வாளர் (தொலைபேசி எண்.89037 46476) அலுவலகத்தினை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.