தஞ்சையில் மீன்கள் விற்பனை மந்தம்


தஞ்சையில் மீன்கள் விற்பனை மந்தம்
x

ஆவணி ஞாயிற்றுக்கிழமையையொட்டி தஞ்சையில் மீன்கள் விற்பனை மந்தமாக இருந்ததால் மக்கள் கூட்டம் இன்றி மீன்மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது.

தஞ்சாவூர்


ஆவணி ஞாயிற்றுக்கிழமையையொட்டி தஞ்சையில் மீன்கள் விற்பனை மந்தமாக இருந்ததால் மக்கள் கூட்டம் இன்றி மீன்மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது.

விரதம்

தமிழ் மாதங்களில் ஒவ்வொரு நாட்களுக்கும் ஒரு சிறப்பு உண்டு. கார்த்திகை சோமவாரம், ஆடி வெள்ளி, புரட்டாசி சனி போல ஆவணி ஞாயிறு அற்புதமான நாள். அரசு வேலை கிடைக்கவும், படித்து முடித்து விட்டு வேலைக்காக காத்திருப்பவர்களும் ஆவணி ஞாயிற்றுக்கிழமை சூரியபகவானுக்கு விரதமிருந்து வழிபடலாம். ஆவணி ஞாயிற்றுக்கிழமை விரதம் இருந்தால் இரட்டிப்பு பலன் ஏற்படும் என்பது பக்தர்களின் ஐதீகம்.

இந்த விரத நாட்களில் அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளை மட்டுமே எடுத்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபடுவது வழக்கம். இதனால் அசைவ உணவுகள் விற்பனை மந்தமாக இருக்கும். ஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று தஞ்சையில் மீன்கள் விற்பனை மந்தமாக இருந்தது.

மீன்கள் விற்பனை மந்தம்

தஞ்சை கீழவாசல் வெள்ளைப்பிள்ளையார் கோவில் அருகே அகழிக்கரையில் தற்காலிக மீன்மார்க்கெட் உள்ளது. இந்த மீன்மார்க்கெட்டிற்கு நாகை, காரைக்கால், கன்னியாகுமரி, கடலூர், சென்னை, ராமேஸ்வரம், தூத்துக்குடி, அதிராம்பட்டினம், கோட்டைப்பட்டினம் ஆகிய கடலோர பகுதிகளில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் இருந்தும் கடல் மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

தஞ்சை மாவட்டத்தில் பண்ணைக்குட்டைகளில் வளர்க்கப்படும் நாட்டு மீன்களும் விற்பனைக்காக தஞ்சை மீன்மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்படுகின்றன. மற்ற நாட்களை விட ஞாயிற்றுக்கிழமை, பண்டிகை, விசேஷ நாட்களில் அசைவ பிரியர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும். அதேபோன்று அதிகஅளவு மீன்களும் விற்பனையாகும். ஆனால் நேற்று ஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தஞ்சை மீன்மார்க்கெட்டில் மீன்கள் விற்பனை மந்தமாக இருந்தது.

வெறிச்சோடிய மார்க்கெட்

அதுமட்டுமின்றி மீன்கள் விலையும் பாதிக்குபாதி குறைந்து இருந்தது.

இருந்தாலும் மீன்கள் வாங்குவதற்கு தான் ஆட்கள் வரவில்லை. ஓட்டல், உணவகங்களுக்கு சிலர் மீன் வாங்க வந்தனர். மக்கள் அதிக அளவில் வராததால் மீன்மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது.

தஞ்சை மீன்மார்க்கெட்டில் ஆனி மாதத்தில் மீன்கள் விலை அதிகமாக இருந்தது. ஆடி மாதம் தொடங்கியவுடன் மீன்கள் விற்பனை குறைய தொடங்கியது. இதனால் மீன்கள் விலையும் படிப்படியாக குறைய தொடங்கியது. தற்போது ஆவணி மாதம் பிறந்துவிட்டதால் மீன்கள் விற்பனை மேலும் குறைந்துள்ளது.

விலை

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ விரால் ரூ.1,500-க்கு விற்பனையானது. நேற்று விலை குறைந்து வெறும் ரூ.200-க்கு தான் விற்பனையானது. இதேபோல் ரூ.300-க்கு விற்ற சங்கரா ரூ.120-க்கும், ரூ.180-க்கு விற்ற கெண்டை மீன் ரூ.120-க்கும், ரூ.180-க்கு விற்ற கிளங்கா மீன் ரூ.100-க்கும், ரூ.600-க்கு விற்ற ரமேஸ்வரம் நண்டு ரூ.300-க்கும், ரூ.400-க்கு விற்ற சிலுவை நண்டு ரூ.200-க்கும், ரூ.400-க்கு விற்ற கொடுவா மீன் ரூ.150-க்கும், ரூ.400-க்கு விற்ற பெரிய இறால் ரூ.300-க்கும், ரூ.300-க்கு விற்ற சிறிய இறால் ரூ.200-க்கும் விற்பனையானது. இதேபோல் மற்ற மீன்களின் விலையும் குறைந்து இருந்தது.

வியாபாரிகள் ஏமாற்றம்

விலைகள் குறைந்து இருந்தாலும் விற்பனை இல்லாததால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர். இது குறித்து வியாபாரிகள் கூறும்போது, தமிழகத்தை விட கேரளாவில் இருந்து மீன்கள் அதிகஅளவில் வந்து கொண்டு இருக்கிறது. ஆனால் ஆடி மாதம் பிறந்துவிட்டாலே மீன்கள் விற்பனை குறைந்துவிடும். ஆடி மட்டுமின்றி ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை ஆகிய மாதங்களிலும் மீன்கள் விற்பனை குறைவாகவே இருக்கும்.

ஆவணி ஞாயிற்றுக்கிழமை என்றால் புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலுக்கு மக்கள் விரதம் இருந்து செல்வார்கள். இப்போது விரதம் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதால் அசைவ உணவை தவிர்த்து விடுகின்றனர். இதனால் வியாபாரம் இல்லை என்றனர்.


Next Story