தூத்துக்குடியில் கல்லூரிகளுக்கு இடையேயான மீன்வளத்திருவிழா கலைப்போட்டிகள்
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில், கல்லூரிகளுக்கு இடையேயான மீன்வளத்திருவிழா கலைப்போட்டிகள் நடைபெற்றது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் கல்லூரிகளுக்கு இடையேயான மீன்வளத் திருவிழா கலை போட்டிகள் நடந்தன.
மீன்வளத் திருவிழா
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இலக்கியத்துறை மாணவர் சங்கம் சார்பில் கல்லூரிகளுக்கு இடையேயான "மீன்வளத் திருவிழா" கலை போட்டிகள் நடந்தன. இந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 8 கல்லூரிகளை சேர்ந்த சுமார் 150 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கலைவிழாவில் தனி நபர் பாடல், ஓவியப்போட்டி, கோலப்போட்டி, விளம்பரயுக்தியை கையாளுதல், தனிநபர் நடனம், குழு நடனம், பேச்சுப்போட்டி, டப்ஸ்மாஸ், தனித்திறமை வெளிப்படுத்துதல், காகித ஆடை மற்றும் கழிவில் இருந்து கலை உருவாக்குதல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்த போட்டியில் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி அணி முதல் இடம் பிடித்து சுழற்கோப்பை மற்றும் ரொக்கப்பரிசு ரூ.5 ஆயிரம் பெற்றனர். பொன்னேரி டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அணி 2-வது இடம் பிடித்து கேடயம் மற்றும் ரொக்கத் பரிசு ரூ.2 ஆயிரம் வென்றனர்.
பரிசளிப்பு விழா
தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவுக்கு தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் ந.வ.சுஜாத்குமார் தலைமை தாங்கினார். மாணவர் சங்க துணைத் தலைவர் சா.ஆதித்தன் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக நெல்லை கால்நடை மருத்துக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் பழனிச்சாமி கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
விழாவில் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் மாணவர் சங்க இலக்கிய அணி செயலாளர் சக்திவேல் நன்றி கூறினார்.